மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

மீண்டும் ஆய்வைத் தொடங்கிய ஆளுநர்!

மீண்டும் ஆய்வைத் தொடங்கிய ஆளுநர்!

கோவையைத் தொடர்ந்து நெல்லையிலும் தனது ஆய்வைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கியுள்ளார்.

திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 6) மதியம் நடைபெற்ற 25வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்குப் பட்டம் வழங்கினார். அதன்பின்னர், திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்திற்கு திடீர் ‘விசிட்’ அடித்த ஆளுநர், அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தார்.

பின்னர், தூய்மை பாரதம் திட்டத்தில் ஒருபகுதியாகத் தூய்மை பணியில் அவர் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் அவருடன் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டார். மேலும், சுகாதார பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளை அதிகாரிகளுக்கு பன்வாரிலால் வழங்கினார். இதன்பின்னர், பளையங்கோட்டை லூர்துநாதன் சிலை அருகேயுள்ள பகுதிகளில் வீடுவீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த இரண்டாவது ஆய்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த நவம்பர் 14ம் தேதி கோவை சென்ற ஆளுநர் பன்வாரிலால், பின்னர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த நாளும் தனது ஆய்வைத் தொடங்கிய அவர், குடியிருப்பு பகுதிகளில் சுகாதார பணிகள் எவ்வாறு உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டார். தனது ஆய்வுகள் தொடரும் என்றும் அவர் கூறினார். ஆளுநரின் இந்த ஆய்வு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது எனக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon