மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

மானிய சிலிண்டர் திட்டம் செயல்படுகிறதா?

மானிய சிலிண்டர் திட்டம் செயல்படுகிறதா?

அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை 60 சதவிகிதப் பயனாளிகள் குறைந்தது நான்கு முறையாவது மீண்டும் நிரப்பிப் பயன்படுத்துவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஏழைப் பெண்களுக்கு உதவும் வகையில், 2016ஆம் ஆண்டின் மே 1ஆம் தேதியில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. மூன்று ஆண்டுகளில் 5 கோடி இணைப்புகள் வழங்க வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 3.2 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கிராமப் பகுதிகளிலும் மலைப்பிரதேசக் குடியிருப்புகளிலும், மானிய சிலிண்டர் இணைப்பைப் பெறும் மக்கள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தாமல் முந்தைய முறைப்படி விறகு அடுப்புகளில் சமைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே இத்திட்டத்தைச் செயல்பாட்டில் வைத்திருக்க அரசு சார்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மானிய சிலிண்டர் இணைப்பு பெற்ற பெண்களில் சுமார் 60 சதவிகிதத்தினர் குறைந்தது நான்கு முறையாவது மறு இணைப்பைப் பெற்றுள்ளதாக, டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடந்த ’சமையல் எரிவாயு இணைப்பில் பெண்கள்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “மானிய சிலிண்டர் பயன்பாடு வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும். விறகு, நிலக்கரி, சான வறட்டி போன்றவற்றைக் கொண்டு சமையல் செய்யும் பெண்களுக்குத் தூய்மையான எரிவாயு இணைப்பை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் சமைக்கும் போது ஏற்படும் புகை மாசு கட்டுப்படுத்தப்படும். 10 கோடி குடும்பங்களுக்கு இந்த இணைப்புகள் வழங்கப்படும்” என்று பேசினார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon