மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

லக்கானியை அடுத்து ஆளுநர்!

லக்கானியை அடுத்து ஆளுநர்!

தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் விஷால், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் போட்டியிட விஷால் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு, முன்மொழியப்பட்ட இருவரின் கையெழுத்து தவறாக உள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேர்தல் அலுவலரிடம் முறையிட்ட விஷால், தேர்தல் ஆணையம் தனது மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் நேற்றிரவு ஊடகங்களில் தெரிவித்தார். ஆனால் சில மணி நேரத்தில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று ( டிசம்பர் 6) பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் கணக்குகளை டேக் செய்து, "ஆர்.கே.நகரில் எனது வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது முறையானது அல்ல. இந்த விவகாரத்தை உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்துள்ளேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்று முறையிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்த விஷால், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். லக்கானியிடம் வேட்புமனு பரிசீலனையின் போது நடந்த நிகழ்வுகளை விளக்கிய விஷால், "மற்ற சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், என்னுடைய மனுவின் பரிசீலனையில் மட்டும் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்தே என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது" என்றும் அவரிடம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "சந்திப்பில் தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சம்பவங்களை விளக்கினோம், இதுகுறித்து ஆளுநரையும் சந்தித்து முறையிட உள்ளோம். நேற்று என்னுடைய வேட்புமனு ஏற்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள காமிராவில் பதிவாகியுள்ளது. தேர்தல் அலுவலரே எனக்குக் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அந்த வீடியோ காட்சிகளை அதிகாரிகள் பார்த்தாலே உண்மை தெரிந்துவிடும். இது குறித்து எழுத்துபூர்வமாகவும் புகார் அளித்துள்ளோம்" என்று விளக்கினார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon