மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

குமரி மக்களுக்காகச் சென்னையிலிருந்து எழும் குரல்!

குமரி மக்களுக்காகச் சென்னையிலிருந்து எழும் குரல்!

ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைச் சென்னை வாழ் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் அரசுக்கு முன்வைத்துள்ளார்கள்.

சென்னையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 4) இந்தக் குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், மீனவக் குடும்பங்களின் சார்பில் ‘நாம்’ அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ராஜ், தாணு ஶ்ரீ, கில்பர்ட் ராஜ், ஆனந்த், பத்திரிகையாளர் பீர் முகமது, ரஸல் ராஜ் ஆகியோர் அரசுக்குத் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஓகி புயல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே 80 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில், 25 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மீதமுள்ளவர்களின் உடல்களைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

“கடந்த 20ஆம் தேதி ஓகி புயல் மையம் கொள்ள ஆரம்பித்தது. ஆனால், தமிழக அரசு அதற்கான எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறது அரசு? ஓகி புயலால், மனித உயிர்களும், இயற்கை வளங்களும் பாதிக்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்தன. 110 கிலோமீட்டர் வேகத்துக்கு வீசிய புயலால் ஏராளமான மின்கம்பங்கள் விழுந்து சேதமடைந்தன. சுமார் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டார்கள்” எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறப்பட்டது.

மீனவர்களின் உயிரிழப்புக்குத் தமிழக அரசின் அலட்சியப் போக்கே முக்கியக் காரணம் என இக்குழுவினர் சுட்டிக்காட்டினர். “2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோதும்,2016ஆம் ஆண்டு வர்தா புயலின் தாக்கத்தின்போதும் சேதமடைந்த பகுதிகளை ஒரு வாரத்தில் சீரமைத்தனர். ஆனால், கன்னியாகுமரியில் வெள்ளம் வந்ததை அறிவிக்கவில்லை; சீரமைப்பதற்கான நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை. அண்டை மாநிலமான கேரள அரசு செய்த உதவியைக்கூட நம் தமிழக அரசு செய்யவில்லை. மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் எனத் தமிழக அரசு கூறுகிறது. ஆனால், அப்படிச் செய்வதற்கான அடையாளம் எதுவும் தெரியவில்லை. மீட்புப் படை எதுவும் இல்லையென்றால், மீனவர்களைக் கொண்டே ஒரு மீட்புப் படையை உருவாக்குங்கள். நாங்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தானே?” என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாகத் தலா ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் வேளாண்மைத் துறைக் குழு அமைத்து மக்களின் இழப்பீட்டை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, பத்திரிகையாளர் பீர் முகமதுவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த செய்தியாளர் சந்திப்பில் ஒன்பது கோரிக்கைகள் வைக்கப்பட்டன. புயலின் வேகத்தைச் சரிவர கணிக்காதது, ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு தகவல் சொல்லத் தவறியது , உடனடி மீட்புப் பணியில் இறங்காதது, பேரிடர் ஆயத்தமின்மை ஆகியவை இந்த ஓகி புயலில் வெளிப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

வாழை மரங்களும் வயல்களும் முற்றிலும் அழிந்துள்ளன. அரசு புள்ளிவிவரபடியே,36,000 ஹெக்டர் நிலப்பரப்பில் ரப்பர், மரச்சீனி உட்பட பயிர்கள் அழிந்துள்ளன என்று கூறும் பீர் முகமது, “பேரிடருக்கு அரசு ஆயத்தமாக இல்லை என்பதுதான் இங்கு பிரச்சினை. குறிப்பாக, கடலுக்குள் ஒரு படகையோ, ஒரு ஆளையோ தேடக்கூடிய விஷயம் என்பது உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். வான்வழி ஆய்வை 48 மணி நேரங்களுக்கு பிறகுதான் ஆரம்பித்தனர். சாலை மறியல், போராட்டம் செய்து மீனவர்களை மீட்டுக் கொடுங்கள் என்று சத்தம் போடும் அளவுக்கு அரசு மெத்தமாக இருந்திருக்கிறது” என்றார்.

மக்கள் அரசுக்கு குரல் கொடுத்த பிறகுதான் அரசு விழித்துக் கொண்டது. இயற்கையை, சுற்றுச்சூழலை மதிக்காத வளர்ச்சிதான் இந்த ஒட்டுமொத்த அழிவுக்குக் காரணம் என்ற செய்தி பத்திரிகையாளர் சந்திப்பில் அழுத்தமாக முன்வைக்கப்பட்டது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon