மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 ஆக 2020

உதயநிதி படத்தை வாங்கிய விஜய் டிவி!

உதயநிதி  படத்தை வாங்கிய விஜய் டிவி!

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை, ஸ்டார் விஜய் டிவி வாங்கியுள்ளது.

திலீஷ் போத்தன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இந்தப் படத்தை தமிழில் ‘நிமிர்’ என்ற தலைப்பில் ப்ரியதர்ஷன் ரீமேக் செய்துள்ளார் .

உதயநிதிக்கு ஜோடியாக நமீதா ப்ரமோத், பார்வதி நாயர் இருவரும் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. “குடும்பத்தோடு ரசித்து பார்க்கும் படியான படங்களையே நாங்கள் எப்போதும் வாங்குவோம். நிமிர் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய திரைப்படம். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து உதயநிதி மற்றும் ப்ரியதர்ஷன் படங்களை வாங்க ஆவலாக உள்ளோம்” என விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பாராட்டியுள்ளார்.

மூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத் இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, அய்யப்பன் நாயர் எடிட் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை விஜய் டிவி வாங்குவது, இது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon