இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 தொடரில் விளையாடிவருகிறது. முதல் இரண்டு
டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 2) தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 536 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் ஆளுக்கொரு சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 246 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்தது. 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய மேத்யூஸும், தினேஷ் சந்திமாலும் இந்த முறை விரைவாக ஆட்டமிழந்தனர். எனினும், நிதானமாக விளையாடிய தனஞ்ஜெயா டி சில்வா சதம் அடித்து அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரோஷன் சில்வாவும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். திடீரென தனஞ்ஜெயாவிற்கு முதுகு வலி ஏற்பட்டதால், அவர் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா- ரோஷன் சில்வாவிற்கு ஜோடியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்.
கடைசி நாளான இன்று இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்களைச் சேர்த்திருந்தது. ரோஷன் சில்வா 74 ரன்களுடனும், நிரோஷன் டிக்வெல்லா 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எனவே போட்டி டிராவில் முடிவடைந்தது. எனினும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்தத் தொடரைக் கைப்பற்றியதன் மூலம், தொடர்ச்சியாக அதிகத் தொடர்களில் வெற்றி பெற்ற அணி என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இணைந்துள்ளது. இரு அணிகளும் தொடர்ச்சியாக 9 தொடர்களில் வெற்றிபெற்றுள்ளன.
ஒரு வருடத்தில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் 31 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள ரிக்கி பாண்டிங் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 243 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்களும் அடித்ததால் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.
தொடரில் மொத்தம் 610 ரன்களைச் சேர்த்ததால் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.,