மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

இறந்ததாகக் கூறப்பட்டு உயிர்பெற்ற குழந்தை இறந்தது!

இறந்ததாகக் கூறப்பட்டு உயிர்பெற்ற குழந்தை இறந்தது!

டெல்லியில் உயிருள்ள குழந்தையை இறந்ததாகக் கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த அக்குழந்தை இன்று (டிசம்பர் 6) இறந்தது.

டெல்லியைச் சேர்ந்த ஆசிஷ் (26) என்பவரின் மனைவி வர்ஷா (20). 6 மாத கர்ப்பிணியான வர்ஷாவுக்கு நவம்பர் 28ஆம் தேதி கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால், ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். நவம்பர் 30ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. 12 நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு பெண் குழந்தை பிறந்து. பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தையும் இறந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை நிர்வாகம் இரு குழந்தைகளின் உடல்களையும் பிளாஸ்டிக் பையில் பேக் செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தது.

குழந்தைகளின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக ஏற்பாடுகள் செய்தபோது, ஆண் குழந்தை சுவாசித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை பிம்பம்பூரில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்வம் தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.45 மணி அளவில் உயிரிழந்தது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon