மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

பள்ளிக் கட்டடம்: பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை!

பள்ளிக் கட்டடம்: பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை!

அரசு பள்ளிக் கட்டடம் இடிந்து பலியான இருவர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு கல்வித் துறை மூலம் அரசு வேலை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியின் ஒரு பிரிவுக் கட்டடம் சுமார் 32 ஆண்டுகள் பழைமையானது. இதையடுத்து புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டதால், பழைய கட்டடத்தை இடிக்கும் பணியை நேற்று (டிசம்பர் 05) செய்துவந்தனர்.

அப்போது அங்கு இருந்த பொருள்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர்கள் அய்யனார், மதிவாணன் ஆகியோர் பார்வையிடச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக மொத்தக் கட்டடமும் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.

அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனே அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சிவபாரதி, அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. கல்வித்துறை இயக்குநர் குமார், பொதுப்பணித்துறை தலைமை இயக்குநர் சண்முகசுந்தரம் ஆகியோர் பார்வையிட்டனர்.

“புதுவையில் 52 பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. தற்போது 28 கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்துவருகிறது. இந்தப் பள்ளியில் பணி நடந்தபோது விபத்து நேர்ந்துவிட்டது. இதில் பலியான இருவர் குடும்பத்திலும் தலா ஒருவருக்கு அரசு கல்வித் துறை மூலம் அரசு வேலை வழங்கப்படும். மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்தும் உதவி அளிக்கப்படும். தேவையான அனைத்துச் சலுகைகளும் வழங்கப்படும்” என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon