வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவுக்கு, முதல் மாநிலமாக ஆதரவு தெரிவித்திருக்கிறது உத்தரப்பிரதேச பாஜக அரசு.
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதியன்று நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான டெல்லி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் என்று கூறி ஒரு பெண்ணை அவரது கணவன் விவாகரத்து செய்யும் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. இதற்கு மாற்றாக, புதிய சட்டத்தை இயற்ற தயாராக உள்ளதாக, மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான புதிய சட்ட முன்வரைவு தயார் செய்யப்பட்டது. ’முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சட்ட முன்வரைவு, வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, முத்தலாக் என்று ஒரே நேரத்தில் நேரிலோ, இமெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் போன்ற மின்னனு சாதனங்கள் மூலமாகவோ, ஒரு பெண்ணை அவரது கணவரால் விவாகரத்து செய்ய இயலாது. அவ்வாறு விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்க இது வகை செய்யும். கணவரைப் பிரிந்த பெண்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் ஜீவனாம்சம் பெறவும் இந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த மசோதா மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக, டிசம்பர் 1ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. வரும் 10ஆம் தேதிக்குள் எல்லா மாநிலங்களும் இதற்கு பதிலளிக்க வேண்டுமென்ற நிலையில், நேற்று (டிசம்பர் 5) உத்தரப்பிரதேச மாநில அரசு இதற்கு முதலாவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 15ல் தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கூட்டத்தொடர் முடியும் முன்பே விவாதிக்கப்பட்டு, திருத்தங்களுடன் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது. அதன்பிறகே, இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.