மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

நிராகரிப்பு: பிரதமருக்கு விஷால் கோரிக்கை!

நிராகரிப்பு: பிரதமருக்கு விஷால் கோரிக்கை!

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாகப் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு நடிகர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மாளிகையின் ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து ட்விட்டரில் , ”நான்தான் விஷால், ஆர்.கே.நகர் தேர்தல் முறையில் என்ன நடைபெறுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். எனது வேட்பு மனு முதலில் ஏற்கப்பட்டு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது முறையானது அல்ல. இந்த விவகாரத்தை உங்கள் கவனத்திற்கு எடுத்து வந்துள்ளேன். நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், சென்னையில் இன்று (டிசம்பர் 6 ) செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், “தனிப்பட்ட வேட்பாளர் மீது இந்த அளவு வஞ்சம் இருக்கும் என்பது ஆச்சரியமளிக்கிறது. தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து நான் போட்டியிடுவதாகக் கூறுவது தவறு. நான் இந்தியன். மேலும், தினகரன் , கமல், திமுக போன்ற யாரும் என்னை இயக்கவில்லை” என்று விளக்கமளித்தார்.

“மிரட்டப்பட்டதால்தான் என்னை முன்மொழிந்தவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். விஷால் மனு நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையமே அறிவித்துவிட்டது. எனவே, சம்பந்தப்பட்ட பெண்ணை யாரும் மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றும் கூறினார்.

தேர்தல் அதிகாரி மிரட்டப்பட்டாரா என்ற கேள்விக்கு, “தேர்தல் அதிகாரியின் முடிவுதான் இறுதியானது. அப்படியிருக்கும்போது ஏன் உயர் அதிகாரியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று அவர் கூற வேண்டும்? மேலும், யாரிடமோ போனில் பேசிவிட்டு வந்து எனது மனுவை நிராகரிப்பதாகக் கூறினார்” என்று தெரிவித்த விஷால், தேர்தல் அதிகாரியை மாற்றுவதால் மட்டுமே எல்லாம் சரியாகிவிடாது என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியவில்லை. எனது வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது தெரியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் இதுதான் கதியா? என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த முறை பணப் பட்டுவாடா நடைபெற்றதாகத் தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது ஆட்களை மிரட்டுவது போன்றவை நடைபெறுகின்றன. இந்த விவகாரம் குறித்து நான் கருத்து தெரிவிப்பதை விட ரீஜெனல் ஆபீஸர்தான் பதில் கூற வேண்டும்” என்று வேதனை தெரிவித்தார்.

இது ஜனநாயக நாடு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நான் வந்தேன். இதில், இவ்வளவு சிக்கல் இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. திரைப்பட காட்சிகளை போன்று திருப்பத்துக்கு மேல் திருப்பமாக உள்ளது. ஒரு வேட்பாளரைப் பற்றிய குற்றச்சாட்டுக்கு அவர் இல்லாமல் எப்படி முடிவெடுப்பது என்று கேள்வியெழுப்பினார். வேட்பு மனு நிராகரிப்புக்குப் பின்னணியில் மதுசூதனன் உள்ளாரா என்ற கேள்விக்கு, “அவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

அடுத்த நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து முறையிடவுள்ளோம். நல்லது செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம். ஒருவேளை நான் போட்டியிட முடியாமல் போனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என விரும்பும் சுயேச்சைகளில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஆதரவளிப்பேன். நிச்சயம் அவரை வெற்றிபெறச் செய்வேன்”என்று சூளுரைத்தார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon