மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

குமரி செல்கிறார் ஆளுநர் புரோகித்

குமரி செல்கிறார் ஆளுநர் புரோகித்

கன்னியாகுமரி செல்லும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை (டிசம்பர் 7) பார்வையிடுகிறார்.

கடந்த மாதம் கோவை சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அங்கு ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின், கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அதிமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இதனை வரவேற்றாலும், மற்ற கட்சியினர் இதற்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில் இதுபற்றிய செய்தியை வெளியிட்டபோது, கோவைக்கு அடுத்தபடியாக ஆளுநர் கன்னியாகுமரி செல்வார் என்று குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்றவாறு, இன்று (டிசம்பர் 6) மாலை கன்னியாகுமரி செல்கிறார் புரோகித். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு, தற்போது புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யச் செல்வதாக மாற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இன்று நடைபெறும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார் ஆளுநர். அதன் பின், இன்று இரவு கன்னியாகுமரி சென்று ஓய்வெடுக்கிறார். நாளைக் காலை 9.15 மணி முதல் 11.45 வரை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதோடு, மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறார்.

அதன் பிறகு, மாலை 4 மணிக்குக் குமரி விருந்தினர் மாளிகையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்வில், பொதுமக்களோடு அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட நேரத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகிய இடங்களுக்கு ஆளுநர் செல்வார் என்று அவரது அலுவலகத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுள்ளது.

முன்னதாக, இன்று திருநெல்வேலி செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வண்ணாரப்பேட்டையிலுள்ள விருந்தினர் மாளிகையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பொதுமக்களை நேரில் சந்திக்கவுள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon