மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

சென்னை: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

சென்னை: நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகச் சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவியது. குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், பல மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில் சென்னையிலும் பெய்துவந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இது குறித்துச் சென்னை குடிநீர் வாரியம் அளித்த தகவல்கள் வருமாறு:

சென்னை மாநகரின் ஒரு ஆண்டுக்கான சராசரி அளவு 1,200 மில்லி மீட்டர். இந்த மழைப்பொழிவு இரண்டு கால கட்டங்களாகப் பெய்கிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 400 மில்லி மீட்டரும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 800 மில்லி மீட்டரும் மழை பெய்கிறது. சென்னை மாநகரில் உள்ள கிணறுகள் மூலம் மழைக் காலங்களில் நிலத்தடி நீர் சேமிக்கப்படுகிறது.

பொதுவாகச் சென்னை குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தையும், அதன் உப்பு தன்மையையும் மாதந்தோறும் கண்காணிப்பது வழக்கம். இது சென்னையின் பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், 145 கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்து வருகிறது.

சென்னை மாநகரில் மூன்று விதமான மண் வகைகள் உள்ளன.

1. மணல் சார்ந்த பகுதி.

2. களிமண் சார்ந்த பகுதி

3. பாறை சார்ந்த பகுதி

இந்த மூன்று மண் வகைகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் தன்மையும், நீர் உறிஞ்சும் தன்மையையும் வேறுபடும்.

நிலத்தடி நீர்மட்டமானது ஆண்டுதோறும் பருவநிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியது. எனவே நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரத்தை குறிப்பிட்ட மாதத்தின் அளவைச் சென்ற ஆண்டின் அதே மாதத்துடன்தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஒரு ஆண்டில் உள்ள வெவ்வேறு மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஏனென்றால் குறிப்பிட்ட ஆண்டில் ஜூலை மாத நிலத்தடி நீர்மட்டம் மற்றும் அதன் தரம் அந்த ஆண்டின் ஜனவரி மாதத்தைவிட எப்போதும் குறைவாகவே இருக்கும். சென்னை நகரில் நவம்பர் 2016 மற்றும் நவம்பர் 2017 மாதங்களில் உள்ள நீர்மட்ட அளவுகளை ஒப்பிடும்போது, தற்போது பெய்த தொடர் மழையால் சென்னை மாநகரிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 0.55 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை உயர்ந்துள்ளது எனச் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாகப் பெருங்குடியில் நிலத்தடி நீர்மட்டம் 3.81 மீட்டர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மட்டுமல்லாமல் தேனி, நாமக்கல், கரூர், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், காஞ்சிபுரம், வேலூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாகவும், தர்மபுரி, கடலூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது என்றும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார, விவரக் குறிப்பு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon