மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

அஞ்சலி: சஷி கபூர் - நீங்காத நினைவுகள்!

அஞ்சலி: சஷி கபூர் - நீங்காத நினைவுகள்!

வெங்கடேஷ் சக்கரவர்த்தி

சஷிகபூருக்கு ஒரு அஞ்சலி நிச்சயமாக எழுத வேண்டும் என்று நேற்றிலிருந்து ஒரே உறுத்தல். ஏனென்றால் என் தலைமுறையைப் பொறுத்தவரை அவரை போன்றவர்களே எங்களைக் கவர்ந்த நாயகர்கள். ஆனால் அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றா இரண்டா நிறைய இருக்கின்றது. ஆகையால் அதை முழுமையாக எழுதமுடியாது. ஏன் இந்த பதிவைக்கூடச் சரிவர எழுத முடியுமா என்று தெரியவில்லை.

1978இல் மும்பையிலிருந்து சென்னை திரும்பும் முன் பாந்த்ரா ரயில் நிலையத்தின் அருகே உள்ள ஒரு தியேட்டரில் அவர் ஜீனத்துடன் நடித்த சத்யம் சிவம் சுந்தரம் என்ற படத்தை அதன் முதல் நாள் நைட் ஷோவில் பார்த்தேன். படம் துவங்கி அரை மணிநேரத்தில் ரசிகர்கள் – க்யா பக்வாஸ் பிக்சர் லியா கபூர்ஜினே – என்று ராஜ்கபூரை ஏசினார்கள். பிறகு அந்த கூச்சல் குழப்பத்தின் நடுவேதான் அந்த நீண்ட படத்தை ஜீரணிக்க முடியாமல் பார்த்துத் தொலைத்தேன்.

சஷிகபூர் அன்றய காலத்தில் இங்கு ஜெமினி கணேசன் இருந்த இடத்தில் இருந்தார். அதாவது அமிதாப் பச்சனும் ராஜேஷ் கண்ஹாவும் முன்னிலையில் இருந்தார்கள் என்றால் இவர் மூன்றாம் இடத்தில் இருந்தார். ஆனால் இந்த மூவரில் அதிகப் படங்களுக்கு கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் வாங்கியவர் சஷிகபூர் மட்டுமே. ஏனென்றால் முதல் இருவரை ஒப்பந்தம் செய்வதற்கு அவ்வளவு கெடுபிடி. யார் சென்று அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தாலும் உடனே இவர் பணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டு கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுவார். ஆனால் மற்ற நட்சத்திரங்களைப் போல் இவரும் படப்பிடிப்புத் தேதிகளை அந்தக் காகிதத்தில் குறிப்பிட மாட்டார்.

இதனால் தயாரிப்பாளருக்கு என்ன லாபம் என்று கேட்கலாம். இந்திப் படம் என்றால் அனைத்திந்திய வியாபாரம் என்பதால் முக்கா பேர்வழிகளுக்கு பெரிதாகப் பிரச்சினை ஒன்றுமில்லை. சஷிகபூருக்குப் பத்து லட்சமும், ஏதாவது ஒரு பிரபலமான பெண் நட்சத்திரத்திற்கு ஐந்து லட்சமும், இயக்குனர், மியூசிக் டைரக்டர் போன்றவர்களுக்குத் தலா இரண்டு லட்சமும் கொடுத்தால் போதும். மேலும் ஒரு இரண்டு லட்சத்தில் பூஜையைப் போட்டுவிடலாம். அந்த நாளன்று டிஸ்ரிபியூட்டர்கள் ஈயைப் போல் வந்து மொய்ப்பார்கள். இதில் கொழுத்த கிடாக்கள் ஒரு ஏழு எட்டைத் தேர்வு செய்து வெட்டிவிடுவார்கள். அதாவது இவர்கள் முதலீடு செய்த முப்பது முப்பந்தைந்து லட்சங்களுக்கு ஒன்றரைக் கோடியை அவர்களிடமிருந்து வசூலித்துவிடுவார்கள்.

இந்த பலி கிடாக்களுக்கும் அதனால் பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை. ஏனென்றால் அவர்களுக்கும் இந்த ஆட்டம் தெரியும். அதாவது உத்தரப் பிரதேச உரிமையை முப்பது லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒரு கோடி மினிமம் கியாரன்டிக்கு வாங்கியவர் ஊருக்குத் திரும்பியவுடன் அதை அங்கிருக்கும் மாநிலங்களுக்கு பீஸ் போட்டு லோக்கல் டிஸ்ட்ரிப்யூடர்களிடம் ஐம்பது லட்சம் கறந்துவிடுவார். இப்படி சஷிகபூர் அவர்கள் கையெழுத்துப் போட்ட 150 படங்களின் தயாரிப்பாளர்களில் 75 பேர் அட்ரஸ் காணாமல் வந்த வரைக்கும் லாபம் என்று ஓடிவிடுவார்கள். முப்பது சதவிகிதம் பேர் அதற்கு மேலும் கடன் வாங்கி ஒரு பத்து நாட்கள் படப்பிடிப்பை எப்படியாவது நடத்திவிட்டு மூழ்கிப்போவார்கள். இருந்தாலும் மீதி இருக்கும் இருபது சதவிகிதம் படத்தை முட்டுக்கொடுத்து முடிப்பார்கள். இவர்களால்தான் சஷிகபூருக்கு நெருக்கடி அதிகம். அதாவது அந்தக் காலத்தில் அமிதாப் பச்சனுக்கும் ராஜேஷ் கண்ஹாவிற்கும் வருடத்திற்குத் தலா ஆறு அல்லது ஏழு படங்கள் ரிலீஸாகும் என்றால் இவருக்கு எட்டு அல்லது ஒன்பது படங்கள் ரிலீஸாகும்.

இந்த பலு உச்சம் அடைந்த 1977இல்தான் அவர் தன் அண்ணன் ராஜ்கபூர் படத்தில் நடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நண்பர், திரைப்பட இயக்குனர், கோட்பாட்டாளர் அருண் கோப்கர் தன் பதிவில் நேற்று கூறியதுபோல், ராஜ்கபூர் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு ஷாட்களையே அவருக்குத் திருப்திவரும் வரை மறுபடியும் மறுபடியும் எடுப்பார். இதனால் சத்யம் சிவம் சுந்தரம் படப்பிடின்போது கடுப்படைந்த சஷிகபூர் தனக்கிருந்த நெருக்கடியால் அந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அதற்கு ராஜ்கபூர், “தம்பி, அவசர அவசரமாக எடுக்கிற படம் வெகு விரைவில் தியேட்டரை விட்டுச் சென்றுவிடும். நான் ஆவாரா என்ற படத்தையும் இப்படித்தான் எடுத்தேன். பொறுத்திரு” என்று சொல்லிவிட்டார். அதற்கு மேல் இவரால் ஒன்றும் பேச முடியவில்லை. ஆனால் இந்த படம் முதல் வாரத்திலேயே தோல்வியைத் தழுவியது என்பதே நிஜம்

சஷிகபூரை அதற்கு முன்னும் பின்னும் எத்தனையோ படங்களில் பார்த்துள்ளேன். ஆகையால் இன்னும் அவரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அவர் ஷேக்ஸ்பியர்வாலா என்ற ஜேம்ஸ்-ஐவரியின் கூட்டு முயற்சியில் உருவான படம் முதல் ஷியாம் பெனகலின் ஜூனூன் மற்றும் ஹனிஃப் குரேஷி / ஸ்டிஃபன் பிஃரையர்ஸின் ஸாமி அண்ட் ரோஸி கெட் லேய்ட் வரை அல்லது அவருடய மூத்த மகள் சஞ்சனா கபூரின் முயற்சியில் இன்றும் வெற்றிகரமாக நாடகத்திற்குப் பெரும் பங்களித்துவரும் ப்ரித்வி தியேட்டர் வரை பேசலாம். போகட்டும்.

என்னைப் பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களாக டாடா இன்ஸ்டியூட் அஃப் சோஷியல் சையன்ஸ் என்ற கல்லூரிக்கு ஒவ்வொரு முறை என் திரையியல் வகுப்புகளை எடுக்கச் செல்லும்போதெல்லாம் அதன் அருகில் இருக்கும் ஆர்.கே. ஸ்டுடியோவின் வாசலில் ஒரிரு நிமிடங்கள் நிற்காமல் சென்றதில்லை. அந்தச் சமயங்களில் ப்ரித்விராஜ் கபூர், ராஜ் கபூர், ஷமி கபூர், சஷி கபூர், ரந்தீர் கபூர், ரிஷி கபூர் போன்றவர்களைத் தவிர எனக்கு அங்கிருக்கும் இரண்டு ப்ளோர்களில் பார்த்த மன்மோகன் தேசாய் படப்பிடிப்புகளும் நினைவுக்கு வரும். அதைப் பற்றியெல்லாம் வேறொரு பதிவில் பேசுவதே சரி.

சஷிகபூர்- ராக்கி நடித்த பாடல் 1971இல் வெளிவந்த ஷர்மிலி என்ற படத்தில் இடம் பெற்று எங்கள் உள்ளங்களை அன்று கொள்ளையடித்துச் சென்ற ஒன்று. இந்தப் படத்தை ரிப்பன் பில்டிங்ஸுக்கும் தில்லி தர்பாருக்கும் இடையில் பெரிமேடு நோக்கிச் செல்லும் சாலையிலிருந்த மாபெரும் நடராஜ் தியேட்டரில் பார்த்த நினவு. அது தவறாகவும் இருக்கலாம். ஆனால் இதை அந்த வருடம் சென்னையில் பார்த்தேன் என்பது நிஜம். பக்கத்தில் காதலியும் இருந்தாள் என்றால் அதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்ன. ஆகையால் ஒன்று நிச்சயம். என் மனதில் அழிக்க முடியாத இடத்தில் அவர் இடம் பெற்றுவிட்டார்.

இதே பாடலை – ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே – என்று காப்பியடித்து குதறியிருப்பார்கள். ஆனால் அதுவும் இந்த பாடலைப் போல அன்று ஒரு பெரிய ஹிட்தான்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon