மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

ஓகி புயல்: நீதிமன்ற உத்தரவு!

ஓகி புயல்: நீதிமன்ற உத்தரவு!

ஓகி புயல் பாதிப்பைப் பேரிடராக அறிவிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகள் புயலால் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, கடலுக்குள் சென்ற மீனவர்கள் கதி என்னவானது என்று தெரியாமல், அவர்களது குடும்பத்தினர் அல்லாடுகின்றனர். கடந்த நான்கு நாட்களாக இந்த நிலை நீடித்துவரும் நிலையில், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அங்குள்ள மக்களைச் சந்தித்துவருகின்றனர்.

கேரளாவை புயலால் பாதிக்கப்பட்ட பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டுமென, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நான்கு நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தார். மத்திய அமைச்சர்கள் அல்போன்ஸ், நிர்மலா சீதாராமன் ஆகியோர், அப்படி உத்தரவிட முடியாது என மறுத்தனர். தமிழகத்திலும் குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தப் புயல் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் எழுதினார்.

காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சித் தலைவர்களும் குமரியை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ஓகி புயல் பாதிப்பைப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ராஜன் என்பவர் மனு செய்திருக்கிறார். கன்னியாகுமரியில் 28 மீனவ கிராமங்கள் இருக்கின்றன; இங்குள்ள மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் சிறந்து விளங்குபவர்கள். கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஓகி புயல் கடுமையாக வீசியதால், மீன்பிடிக்கச் சென்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இவர்கள் வெவ்வேறு இடங்களில் கரை ஒதுங்கியிருக்கின்றனர்.

ஹெலிகாப்டர் இறங்குதளம் கன்னியாகுமரியில் இல்லாததால், உடனடியாக மீட்புப் பணியைச் செயல்படுத்த முடியவில்லை என்று கூறப்பட்டது; இதனால், பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக குமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க உத்தரவிட வேண்டும்; புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும்; குமரி மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஓகி புயல் பாதிப்பைப் பேரிடராக அறிவிப்பது தொடர்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு புயலால் இறந்த மீனவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

கேரளாவில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் வழங்க, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு 31 மீனவர்கள் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon