மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

ஹாதியாவின் கணவருக்கு ஐஎஸ் தொடர்பு?

ஹாதியாவின் கணவருக்கு ஐஎஸ் தொடர்பு?

ஹாதியாவின் கணவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண் அகிலா, முஸ்லிமாக மதம் மாறி ஹாதியா எனப் பெயர் மாற்றிக்கொண்டு ஷபின் ஜஹானைத் திருமணம் செய்துகொண்டார். இது "லவ் ஜிஹாத்" என்று கூறித் தொடரப்பட்ட வழக்கில், இந்தத் திருமணத்தைக் கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து ஷபின் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த நவம்பரில் நடந்த விசாரணையின்போது கணவருடன் சேர்ந்து செல்ல விரும்புவதாக ஹாதியா தெரிவித்தார். ஹாதியா சேலத்தில் ஹோமியோபதி படிப்பைத் தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஷபின் ஜஹானிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹானுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகளைக் கொல்லவும் தென்னிந்தியாவின் முக்கிய இடங்களைத் தகர்க்கவும் திட்டமிட்டதாக மன்சீத், சப்வான் என்ற 2 பேரைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என்ஐஏ போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள். பேஸ்புக் குழு மூலம் இந்த இருவருடனும் ஷபின் ஜஹான் தொடர்பில் இருந்துள்ளார்.

ஹாதியாவும் ஷபினும் கூறுவதுபோல அவர்களது திருமணம் இணையதளம் மூலமாக இல்லாமல் மன்சீத், சப்வான் மூலம்தான் திருமணம் நடந்துள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இணையதளம் மூலம் திருமணம் நடந்தது என்று சொல்வதில் முரண்பாடுகள் இருப்பதாகவும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon