மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

தேர்தல் அதிகாரி: எதிர்க்கட்சிகள் குரல்!

தேர்தல் அதிகாரி: எதிர்க்கட்சிகள் குரல்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (டிசம்பர் 6) விடுத்துள்ள அறிக்கையில், “ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை மீண்டும் ரத்துசெய்வதற்குச் சதி நடக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. நடிகர் விஷால் வேட்பு மனு விஷயத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எனவே ஆர்.கே. நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 36 (2) (c)இல் வேட்பாளரின் கையொப்பமோ அவரை முன்மொழிந்தவரின் கையொப்பமோ போலியாக இருந்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது என்ற போதிலும் நிராகரிப்பதற்கு முன் அது போலி என்பதைச் சட்டரீதியாக அவர் உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவை வேட்பாளரிடம் கூறி அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வேட்பாளர் தனது தரப்பை நிரூபிக்க ஒருநாள் அவகாசம் தர வேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 36 (5) ல் கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள திருமாவளவன், அப்படி எந்த வாய்ப்பும் தராமல் உடனடியாக முடிவை அறிவித்ததன் மூலம் அந்தச் சட்டப் பிரிவை அதிகாரி மீறியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நடிகர் விஷாலின் வேட்பு மனுவை நிராகரிப்பதற்குச் சொன்ன காரணத்தை நாளை எந்தவொரு வேட்பாளருக்கும் சொல்ல முடியும். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்த் தரப்பு வேட்பாளரை யார் முன்மொழிகிறார்களோ அவர்களை மிரட்டி அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச் செய்துவிட முடியும். இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். தேர்தல் முறையையே நாசமாக்கிவிடும்” என்று எச்சரித்துள்ள அவர், நடிகர் விஷாலின் மனு மீது முடிவெடுப்பதற்கு முன்னர் அவர் கூறியுள்ள புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். யாராவது வேட்பாளரது தூண்டுதலின் மூலம்தான் விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் எனத் தெரிந்தால் அதற்குக் காரணமானவர்மீது உரியச் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கும் தேர்தல் அதிகாரி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை .எனவே அவரை மாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “சுயேச்சை வேட்பாளராகத் தாக்கல் செய்யப்பட்ட விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரை முன்மொழிந்த இரண்டு பேரின் கையெழுத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நிராகரிக்கப்பட்டுள்ளது சரியானது அல்ல. நிர்பந்தத்தின் பேரில்தான் என்னை வழிமொழிந்தவர்கள் மாற்றிக் கூறினர் என்று விஷால் கூறியதை முதலில் ஏற்று, பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்துமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. விஷால் வேட்பு மனு பிரச்சினையில் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக யாரோ நிர்ப்பந்தம் செய்துள்ளனர். அதனால்தான் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையம் மேல் மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். இதே நிலைமை நீடித்தால் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon