இளம் நடிகர்களில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் அதர்வா முதன்முறையாக ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.
பிரபுதேவாவின் குலேபகாவாலி படத்தில் நடித்துவரும் ஹன்சிகா அதர்வாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டார்லிங் திரைப்படத்தை இயக்கிய ஷாம் ஆண்டன் இப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் அளித்த பேட்டியில், “இந்த படத்தில் அதர்வா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் வகையில் உருவாக உள்ள படத்தில் புதிய ஜோடி வேண்டும் என எதிர்பார்த்த படக்குழு அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
யோகி பாபு காமெடியனாக நடிக்கிறார். ஷாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்குகிறது.
அதர்வா தற்போது இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்தை, செம போதை ஆகாதே, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.