புதிய புயல் சின்னத்தால் தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் (டிசம்பர் 7, 8) கனமழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் துயரத்தைச் சந்தித்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வாழை மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் புதிய புயல் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்ததையடுத்து, புதிய புயலால் தாக்கம் அதிகம் இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். எனினும், புதிய புயல் சின்னத்தால் கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
“தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இது தாழ்வு மண்டலமாக மாறினாலும் ஓகி புயல் மறைந்த பிறகுதான் இது புயலாகத் தலை தூக்க முடியும்.
புதிய புயல் சின்னம் காரணமாகச் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 7, 8 தேதிகளில் கன மழையை எதிர்பார்க்க முடியாது. கடலில்தான் கன மழை பெய்யும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்திற்கு கன மழையைத் தராது. இந்த நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பகுதிக்குள் மிதமான மழைதான் பெய்யும்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை, இயல்பான மழையைவிட 4 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளது” என வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
ஓகி புயலால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக 11ஆவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செலவில்லை. இதனால் மீனவர்கள் வருவாய் இழந்துள்ளனர்.