மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

நடிகை பெயரில் மலிவு விலை உணவகம்!

நடிகை பெயரில் மலிவு விலை உணவகம்!

கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடிகை ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் வாழும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மலிவு விலையில் உணவு வழங்கும் இந்திரா கேன்டீன்கள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக பெங்களூருவில் 198 மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த கேன்டீன்களில் காலை உணவாக இட்லி, புளி சாதம், பொங்கல் வழங்கப்படும். மதிய உணவாக சாப்பாடு, தயிர், பருப்புக் குழம்பு ஆகியவை வழங்கப்படும். இரவு உணவாகத் தக்காளி சாதம், புளி சாதம், புதினா சாதம் போன்றவை வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பாக அப்பாஜி கேன்டீன் உணவகம் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மண்டியாவில் நடிகையும், அந்தத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான‌ ரம்யா பெயரில் மலிவு விலை உணவகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3)தொடங்கப்பட்டுள்ளது. ரம்யா ரசிகர் மன்ற தலைவர் ரகு இந்த கேண்டினை தொடங்கியுள்ளார். மண்டியா - மைசூர் பிரதான சாலையில் இந்த கேன்டீன் அமைந்துள்ளது.

குமாரி ரம்யா கேன்டீனில் காலை சிற்றுண்டி 5 ரூபாய்க்கும், மதிய உணவு 10 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. மலிவு விலையில் மசால் தோசை, ராகி களி, மத்தூர் வடை, இட்லி, பொங்கல் உள்ளிட்ட சுவையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. இதனால், ரம்யா உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கேன்டீன் தொடங்கிய 30 மணி நேரத்தில் 1,400 பேர் இந்த உணவகத்தில் உணவருந்தியுள்ளனர்.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்காகக் குறைந்த விலையில் மூன்று வேளை உணவு வழங்கும் அம்மா உணவகம் திறக்கப்பட்டுப் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டம் தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநில மக்களையும் கவர்ந்ததால், பல மாநிலங்களிலும் மலிவு விலை உணவகங்கள் தொடங்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon