நடிகர் திலீப்புக்கு எதிராக கேரளாவின் அங்கமல்லி நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் 650 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 17ஆம் தேதி நடிகையை கடத்திய வழக்கில் பல்சர் சுனில் உட்பட 12 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனிலை விசாரித்ததில், நடிகர் திலீப்புக்கும் நடிகை கடத்தல் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஜூலை 10ஆம் தேதி திலீப் கைது செய்யப்பட்டார். அந்தக் கைதுக்குப் பிறகு கிட்டத்தட்ட 5 முறை விண்ணப்பித்து ஆறாவது முறையாக ஜாமீனில் வெளிவந்தார் திலீப். திலீப்பினுடைய ஜாமீனுக்கு முக்கிய காரணமாக, ‘திலீப்புக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்பதற்கு காவல்துறை போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை’ என்ற காரணத்தை சொன்னது நீதிமன்றம். எனவே, இம்முறை சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையில் திரைத்துறையிலுள்ள 50 பேர் மற்றும் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் ஆகியோரின் வாக்குமூலத்தை காவல்துறை பதிவு செய்திருக்கிறது.
திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் இடையே இருந்த உறவை வெளிப்படுத்தியவர் பாதிக்கப்பட்ட நடிகைதான் என்றும், அதன் காரணமாகவே திலீப்பை மஞ்சு வாரியார் விவாகரத்து செய்தார் என்றும், இந்த காரணத்தினாலேயே திலீப் அந்த நடிகையை பழிவாங்க இப்படி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் திலீப் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பல சம்பவங்களைக் குறிப்பிட்டு சாட்சியம் அளித்திருக்கிறார் மஞ்சு வாரியார். இதனால், விரைவில் திலீப்புக்கு பிடிவாரண்ட் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.