மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 நவ 2019

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு!

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து இருவர் உயிரிழப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளிக் கட்டடத்தை இடித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தால், பள்ளி ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அன்சாரி துரைசாமி அரசு மேனிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியின் ஒரு பிரிவுக் கட்டடம் சுமார் 32 ஆண்டுகள் பழைமையானது. இதையடுத்து புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டதால், பழைய கட்டடத்தை இடிக்கும் பணியை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (நவம்பர் 05) பழைய கட்டடத்தை இடிக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது, அதில் இருந்த பொருள்கள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பள்ளியின் கண்காணிப்பாளர் சிவபாரதி, ஊழியர்கள் அய்யனார், மதிவாணன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக மொத்தக் கட்டடமும் சரிந்து நால்வர் மீதும் விழுந்தது.

அதில் படுகாயமடைந்த நான்கு பேரும் உடனே அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சிவபாரதி மற்றும் பிள்ளையார்குப்பம் பேட் பகுதியைச் சேர்ந்த அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றது.

இதையடுத்து, பள்ளியில் மாணவர்கள் இருக்கும்போது ஏதாவது விபரீதம் ஏற்படும் என்பதால், இந்தப் பள்ளிக்கு இன்று (நவம்பர் 06) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கட்டடம் இடிக்கும் பணியின்போது மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்ததால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon