மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

இன்னும் 5,117 போலி வாக்காளர்கள்!

இன்னும் 5,117 போலி வாக்காளர்கள்!

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெற்றதை சுட்டிக்காட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு இடைத் தேர்தல் டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் ஆர்.கே.நகரில் 45,000 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், அவர்களை நீக்கிவிட்டுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. போலி வாக்காளர்கள் 45,000 பேர் நீக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும் மீண்டும் களத்தில் உள்ளனர். கடந்த நவம்பர் 26ஆம் தேதி மருது கணேஷ், "ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலிலிருந்து உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் பெயர் நீக்கப்படவில்லை"என்றும் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார். மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் வேட்பாளர் மருது கணேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே.நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் உள்ளனர் என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon