மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 29 ஜன 2020

கமலுக்காக மீண்டும் பாடிய ஆண்ட்ரியா

கமலுக்காக மீண்டும் பாடிய ஆண்ட்ரியா

விஸ்வரூபம் 2 படத்திற்காகப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா.

விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த நிலையில் தற்போது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கமல் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் காட்சிகளை மையப்படுத்தி உருவாகி இருக்கும் பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “விஸ்வரூபம் 2 படத்திற்காகப் பாடல் ஒன்றை பாடியுள்ளேன். அந்தப் பாடலுக்கான காட்சிகளைத் தான் சமீபத்தில் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தில் எடுத்தோம். பாடல் நன்றாக வந்துள்ளது, அதை விடக் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு பாடல்கள் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுக்காக ஒரு பாடலைப் பாடிய ஆண்ட்ரியா மீண்டும் விஸ்வரூபம் 2 படத்தில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். கமலஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துவரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டை அடுத்த ஆண்டு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon