ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை 32 சதவிகிதம் அதிகரித்து, இந்தியாவில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹோண்டா நிறுவனம் தனது இந்தியக் கிளை வாயிலாக அதிக வாகனங்களை விற்பனை செய்து இந்தோனேசியாக் கிளையைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு இன்று வரை ஹோண்டா நிறுவனம் விற்பனையில் இந்தியாவில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 20 ஆண்டு காலமாக மோட்டார் வாகன விற்பனையில் முன்னணியில் இருந்த ஸ்ப்லெண்டர் மாடலின் வளர்ச்சியை முறியடித்து 2015 மே மாதம் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் முன்னிலை பெற்றது.
ஹோண்டா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஒய்.எஸ்.குலேரியா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், 2014 நிதியாண்டு முதல் 2018 நிதியாண்டு வரையில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 11 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். 2015ஆம் நிதியாண்டில் 24 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி, 2016ஆம் நிதியாண்டில் 25 சதவிகிதமாகவும், 2017ஆம் நிதியாண்டில் 27 சதவிகிதமாகவும் வளர்ச்சியடைந்தது. அந்த நிறுவனத்திடமிருந்து பெற்ற தகவலின்படி கடந்த ஆறு மாதங்களில் மட்டும் உலகளாவிய சந்தையில் 32 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றி குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குலேரியா, "உலகளவில் ஹோண்டா வாகன விற்பனைச் சந்தையில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி விற்பனையில் சர்வதேச அளவில் 32 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.