மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 27 பிப் 2021

ஏழைகள் வீடுகளைப் பெற ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்!

ஏழைகள் வீடுகளைப் பெற ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்!

மின்னம்பலம்

கர்நாடக அரசு சார்பில், ஏழை–எளிய மக்கள் அனைவருக்கும் பெங்களூரில் 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் வீட்டு வசதித் துறை சார்பில் சமூக–பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காக 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்டி விநியோகம் செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்தார். இதற்காக பெங்களூரில் இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலத்தை வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதிக்கான தொடக்க விழா பெங்களூரில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் சித்தராமையா ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் கிருஷ்ணப்பா, பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், தலைமை செயலாளர் ரத்னபிரபா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இது தொடர்பாக வீட்டு வசதித் துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:

ஆதார் எண் கட்டாயம்

பெங்களூரு நகர மாவட்டத்தில் இருக்கும் அரசு நிலத்தில் 1 லட்சம் அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டில் ஒரு உள் அரங்கம், படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை, குளியலறை இடம் பெறும். இந்தத் திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம்.87,600 ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் விண்ணப்பத்துடன் சாதி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று இணைக்க வேண்டும். ரே‌ஷன் அட்டை எண், ஆதார் எண் கட்டாயம் வழங்க வேண்டும். மீதமுள்ள தகவல்களைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பெறுவார்கள். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

பொதுப் பிரிவுக்கு 50 சதவீதம்

இந்தத் திட்டத்தைப் பயன்டுத்தும் நபர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட தாள் மூலமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த 1 லட்சம் வீடுகளில் ஆதிதிராவிடருக்கு 30 சதவீதம், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்குத் தலா 10 சதவீதம், பொதுப் பிரிவுக்கு 50 சதவீத வீடுகள் ஒதுக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானியமாக ரூ.3½ லட்சமும், பிற பிரிவினருக்கு ரூ.2.70 லட்சமும் வழங்கப்படும். பெங்களூரு ஒன் மையங்கள், மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யலாம். தனியார் கணினி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

கடைசி நாள்

விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க 2018, ஜனவரி 5ஆம் தேதி கடைசி நாள்.

கூடுதல் தகவல்களுக்கு www.ashraya.kar.nic.in/cmonelakh என்ற இணையதள முகவரி அல்லது 080–23118888 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு வீட்டு வசதித் துறை கூறியுள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon