மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 11 ஜூலை 2020

அசோக் மரணத்தை கையிலெடுத்த தேர்தல்!

அசோக் மரணத்தை கையிலெடுத்த தேர்தல்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்ட வேளையில், இந்தப்பக்கம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர்கள் சங்கத் தேர்தலில் களமிறங்குகிறார் ஞானவேல்ராஜா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், சமீபகாலமாக சினிமாவை உலுக்கிவந்த சசிகுமாரின் உறவினரும், கந்துவட்டியால் உயிரை மாய்த்துக்கொண்டவருமான அசோக் குமாரின் மரணத்தைக் குறிப்பிட்டு தனக்கு ஆதரவு தருமாறு கேட்டிருக்கிறார். அந்தக் கடிதம் பின்வருமாறு...

KE ஞானவேல்ராஜா ஆகிய நான் STUDIO GREEN என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 14 வருடங்களாக நடத்தி வருகிறேன். திரைத்துறையில் எனது நிறுவனமும் ஒரு அங்கமாக உள்ளது என்று சந்தோசப்படும் சூழ்நிலையில் தற்போது திரைத்துறை இல்லை என்பதை சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்ததே. திரைத்துறையின் நண்பன் திரு. அசோக்குமார் அவர்களின் தற்கொலை என்னை மிகவும் பாதிப்படைய செய்துள்ளது.

எனது நண்பன் திரு. அசோக் குமார் நேரடியாக தற்கொலை செய்துகொண்டார். ஆனால் திரைத்துறையை சார்ந்த பல நண்பர்கள் நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், என நினைக்கும்போது எனக்கு மிகவும் மன வருத்தத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கான காரணம் என்னை கொதிப்படைய வைத்துள்ளது. அதற்கான காரணத்தை அலசி ஆராயும்போது திரைத்துறை சார்ந்த சங்கங்கள் ஒரு சில நபர்களின் கையில் சென்றுகொண்டிருப்பதுடன், ஒரு சில பேரின் கைப்பாவையாக சங்கங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பது பட்டவர்த்தனமாக தெரியவருகிறது. ஆயிரக்கணக்கான, சினிமா நண்பர்களின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருப்பது திரைத்துறையை சார்ந்த ஒரு சில நபர்கள்தான் என்பதை திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் தெரிந்தும், வெளியில் சொல்ல அச்சப்பட்டும், கூச்சப்பட்டுக்கொண்டுமிருக்கும் அவர்கள் நிலையை பார்த்து, வேதனைப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று சராசரி மனிதனாக ஒதுங்கிக்கொள்ள முடியவில்லை.

எனவே திரைத்துறையின் நலன் காக்கவும், நண்பன் அசோக்குமார் போல தற்கொலைகள் இனியும் நடக்கக்கூடாது என உறுதி ஏற்று, வருகிற டிசம்பர் 24 அன்று நடைபெறவுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். அதற்கு சங்க விதிப்படி தடையாக உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது செயலாளர் பதவியை திரைத்துறையின் நலனுக்காகவும், இனி ஒரு துர்மரணம் நிகழக்கூடாது என நினைத்தும் ராஜினமா செய்து மாபெரும் வேள்வியில் குதித்து உள்ளேன்.

இதில் பல்வேறு இடையூறுகளும், அச்சுறுத்தல்களும் வந்துகொண்டிருக்கிறது. இனியும் வரும். அதுபற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. ஏனெனில், ஒட்டுமொத்த திரைத்துறையும் எனக்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த வேள்வியில் இறங்கியுள்ளேன். எனவே தனிப்பட்ட முறையில் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவு எனக் கருதாமல், திரைத்துறை சகஜ நிலைமைக்கு திரும்புவதற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமென உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

சென்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் என்னை கௌரவ செயலாளராக தேர்ந்தெடுத்த அனைத்து தயாரிப்பாளர் சகோதரர்களுக்கு இத்தருணத்தில் பாதம் தொட்டு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த எட்டு மாதங்களில் என்னால் முடிந்தவரையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட்டுள்ளேன். ஒன்பது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சிறு படங்களுக்கான அரசு மானிய அறிவிப்பு மற்றும் மாதாமாதம் அன்புதொகை மற்றும் இன்சூரன்ஸ் வழங்குதல் ஆகிய செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது என்பதை யாரும் மறுக்க இயலாது.

கேபிள் டிவி மற்றும் மற்ற ஊடகங்கள் மூலம் சங்கத்திற்கு நிரந்தர வருமானம் ஈட்ட வழிவகைகள் ஓரிரு மாதங்களில் ஆரம்பம் ஆகிவிடும். சங்க வளர்ச்சி நிதி மற்றும் உறுப்பினர்களுக்கான நிலம் வழங்குதல் ஆகிய பணிகளுக்கு தேவையான நிதியைத் திரட்ட திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தய ஆண்டுகளில் இல்லாத நலத்திட்டங்களும், தொழில் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலிலும், இந்த எட்டு மாத காலத்தில் பல நிகழ்வுகளைக் கூறலாம்.

வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் தலைவர்' பதவிக்கு போட்டியிட உள்ளேன். உங்கள் எல்லாருடைய அன்பும், ஆசிர்வாதமும் எங்கள் அணிக்கு வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கேட்டுக்கொள்கிறேன்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon