மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

விஜயசாந்தி மீதான மோசடி வழக்கு ரத்து!

விஜயசாந்தி மீதான மோசடி வழக்கு ரத்து!

நடிகை விஜயசாந்தி மீதான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள சொத்து ஒன்றினை விற்பதற்காக அதன் உரிமையாளரிடம் விஜயசாந்தி பொது அதிகாரம் பெற்றிருந்தததாகக் சொல்லப்படும் நிலையில் அந்தச் சொத்தினை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட விஜயசாந்தி தன்னிடம் பணத்தைப் பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஹோட்டல் அதிபர் இந்தர்சந்த் ஜெயின் என்பவர் குற்றச்சாட்டினார். மேலும் சென்னை எழும்பூர் முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடிகை விஜயசாந்தி உட்பட நான்கு பேர் மீது புகார் மனு கொடுத்திருந்தார்.

அது தொடர்பாக அவர் அளித்த மனுவில் சென்னை தி.நகர்ப் பகுதி, டாக்டர் நாயர் சாலையில் உள்ள இரண்டு கிரவுண்டு நிலத்திற்கான பவர் ஏஜென்டாக இருப்பவர் நடிகை விஜயசாந்தி. இந்த நிலத்தை எனக்கு விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்ட நடிகை விஜயசாந்தி, என்னிடம் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதற்காக விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிலத்தை திடீரென வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதில், நடிகை விஜயசாந்தி உட்பட நான்கு பேருக்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 5 வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கு மேல்முறையீட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி நடிகை விஜயசாந்திக்கு எதிரான வழக்கை இன்று (டிசம்பர் 6) ரத்து செய்து உத்தரவிட்டார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon