மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 22 ஜன 2020

விராட் தவறவிட்ட சாதனை!

விராட் தவறவிட்ட சாதனை!

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி ரன் மெஷின் என அனைவராலும் அழைக்கப்படக் காரணம் அவர் இதுவரை குறைந்த போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை சேர்த்துள்ளார் என்பதால் தான். அதிலும் இந்த வருடத்தில் மட்டும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்தது மட்டுமின்றி முன்னணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் பிரைன் லாரா ஆகியோரின் சாதனையை முறியடித்தார்.

அதுமட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாகவும் கங்குலி மற்றும் கபில் தேவ் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ள விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி தற்போது 5ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த 2017ஆம் ஆண்டு மட்டும் விராட் கோலி இதுவரை 2,818 ரன்களைச் சேர்த்துள்ளார்.

இதன் மூலம் ஒரு வருடத்தில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் கோலி. இரண்டாம் இடத்தில் ரிக்கி பாண்டிங் 2833 ரன்களுடனும், முதலிடத்தில் குமார் சங்ககரா 2868 ரன்களுடனும் உள்ளனர். 51 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள விராட் கோலி இனி இந்த வருடம் வேறெந்த போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதால் முதலிடம் பெரும் வாய்ப்பினை இழந்துள்ளார். இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை எனவே இந்த வருடம் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையை தவறவிட்டார் கோலி. இருப்பினும் அவரது ஆவரேஜ் 68.73 ஆகும். இதுவே மேற்கண்ட மூன்று வீரர்களை ஒப்பிடும் போது அதிகபட்சமாகும்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon