மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

விஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்!

விஷால் வேட்புமனு: சினிமாவை மிஞ்சிய அரசியல்!

‘டிசம்பர் 5 – 2016இல் அம்மா இறந்தார். டிசம்பர் 5 – 2017இல் ஜனநாயகம் இறந்தது’ என்று தனது கோபத்தையும் வேதனையையும் தூங்காமல் விழித்து தனது ட்விட்டரில் இன்று அதிகாலை கொட்டியிருக்கிறார் விஷால்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்படுவது தொடர்பான ஆடியோ வெளியான நிலையில், அவரது மனுவை இரண்டாவது முறையாகப் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் மீண்டும் ஏற்றுக்கொண்டதாக விஷால் கூறினார். ஆனால், இரவு 11 மணிக்கு மேல் சினிமாவை மிஞ்சும் காட்சியாக, ‘விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நடிகர் விஷால் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வேட்புமனுப் பரிசீலனையில் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களில் இருவரது கையெழுத்து தவறாக உள்ளதாகக் கூறி வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

விஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்துப்போட்ட தீபன் ஆகியோர் கையெழுத்துப் போடவேயில்லை என்று பின்வாங்கி விட்டனர். அவர்கள் இருவரும் மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார்.

அதில் இடம்பெற்றுள்ள உரையாடல் பின்வருமாறு:

விஷால்: வேலு, நான் விஷால் பேசுறேன்.

வேலு: சொல்லுங்க சார்!

வி: கடிதம் கொடுத்திருக்கியாமே... கையெழுத்து உன்னது இல்லன்னு?

வே: இல்ல சார், எங்க வூட்டு லேடீஸ்கிட்ட மிரட்டி வாங்கியிருக்காங்க சார்.

வி: யாரு மிரட்டி வாங்கியிருக்கிறது?

வே: மூணு மணிக்கு வந்து லேடீஸைக் கூட்டிப் போயிருக்காங்க சார், அப்பவே, இதுமாதிரி வந்து கூப்பிடுறாங்கனு என் வொய்ஃப்போட அக்கா எனக்குப் போன் அடிச்சிட்டாங்க,

வி: யாரு வந்து கூட்டிட்டு போனது?

வே: மதுசூதனன் டீம் சார்

வி: மதுசூதனன் டீமா? எதுக்குக் கூப்பிட்டாங்களாம்?

வே: ‘பத்து பேரு சைன் போட்டு இருக்கீங்களே... இந்த மாதிரி நீங்க சைன் போடல. நீங்க சைன் போட்டது பொய்யினு சொல்லு. ஒரு மனு எழுதிக்கொடு’னு சொன்னங்க சார். உங்களை ரிஜெக்ட் பண்றதுக்காகக் கூட்டிட்டுப் போயிருக்காங்க சார்.

வி: சரி, மிரட்டுனதால நீ கையெழுத்து போட்டுக்கொடுத்துட்டியா?

வே: லேடீஸைக் கூட்டிட்டுப்போகும்போது நான் இல்லே சார். என்னை ஒரு ரூம்ல உக்கார வெச்சிட்டாங்க சார்.

வி: எந்த ரூம்லனு தெளிவா சொல்லு வேலு?

வே: மதுசூதனன் ஆபீஸ். அகஸ்தியா தியேட்டர் பேக் சைட்ல இருக்குற அப்பார்ட்மென்ட்ல இருக்க சொல்லிட்டாங்க. அவங்க வரவரைக்கும் இங்கேயே இருன்னு சொன்னாங்க சார். நம்ம வீட்டு லேடீஸை கூட்டிட்டுனு போயிட்டு, ‘நான் சொல்ற மாதிரி சொல்லுமா’னு சொல்லியிருக்காங்க. எழுதி கையெழுத்து வாங்கிட்டு வீடியோ ரெக்கார்டிங் எடுத்திருக்காங்க சார்.

வி: யார் வீடியோ ரெக்கார்டிங் எடுத்தது?

வே: ஆர்.எஸ்.ராஜேஷ் டீம் சார்.

வி: யாரு?

வே: எனக்குப் பணம் கொடுத்த டீம் சார்.

வி: எவ்வளோ கொடுத்தாங்க?

வே: அது தெரியல சார். ரெண்டாயிரம் கட்ட பிரிச்சுக் கொடுத்தாங்க சார்.

வி: அப்போ நீ பணத்துக்கு விலை போயிட்டீயா?

வே: இல்ல சார், நான் பத்து பைசா கூட வாங்கலை. ‘எனக்குக் காசு வேணாம். நான் ஒழைச்சுச் சாப்பிடுறேன்’னு சொன்னேன். ‘இல்லப்பா, விஷாலை இது பண்றதுக்காகத்தான் இப்பிடி பண்றோம்’னு சொன்னாங்க. ‘முடியாது’னு சொன்னதும் லேடீஸைத் தனியா கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க.

வி: எங்க கூட்டிட்டுப் போனாங்க?

வே: தேர்தல் மனு தாக்கல் பண்ணிங்களே சார்... அந்த பில்டிங் மேல ஜோனல் ஆபீஸுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கப் போயிட்டு, இவங்க கையெழுத்து போட்டது போலினு சொல்லி வாக்குமூலம் வாங்கிட்டாங்க சார்.

வி: அவங்க (லேடீஸ்) எங்க இருக்காங்க இப்போ?

வே: அவங்க வீட்ல ரொம்ப மனசு கஷ்டத்துல அழுதுனு இருக்காங்க சார்.

வி: நான் அவங்க மாதிரி மெரட்ட மாட்டேன். ‘இந்த கையெழுத்து என்னோடது இல்ல’ன்னு வந்து என்கிட்ட சொல்ல சொல்லு.

வே: சரி சார், நான் இட்டுனு வரேன் சார்.

என்று அந்த உரையாடல் முடிகிறது.

இந்த நிலையில் விஷாலின் வேட்புமனுவை இரண்டாவது முறையாக மீண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. சில திருத்தங்களுக்குப் பிறகு விஷால் அளித்த ஆதாரங்களை ஏற்று மீண்டும் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாக வெளியே வந்த விஷால் தெரிவித்துவிட்டு, ‘நீதி நியாயம் ஜெயித்தது. அனைவருக்கும் நன்றி’ என்று அறிவித்துவிட்டுச் சென்றார்.

ஆனால்... அடுத்த ட்விட்ஸ்ட் நேற்று இரவு 10.30க்கு மேல் அரங்கேறியது.

தேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்ட அறிவிப்பில் விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக விஷாலின் வேட்புமனுவில் உள்ள தங்களது கையெழுத்து இல்லை என தீபன் மற்றும் சுமதி ஆகிய இருவரும் மறுத்ததால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மிரட்டப்பட்டதால் பின் வாங்கியிருக்கிறார்கள் என்று விஷால், மேலே குறிப்பிட்டுள்ள ஆடியோ ஆதாரத்தைத் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார்.

ஆனால், விஷாலின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று மதுசூதனன் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனு ஏற்கப்பட்டது என்ற தகவல் கிடைத்ததும் புறப்பட்டுப் போய்விட்டார்.

ஆனால், சில மணித்துளிகள் கழித்து இரவு 11 மணியளவில்... விஷாலின் வேட்புமனுவில் இருக்கும் கையெழுத்துகளில் இரண்டு கையெழுத்துகள் போலி என்பதால் அவரது மனு நிராகரிக்கப்படுகிறது. விஷால் கொடுத்த ஆடியோவின் உண்மைத் தன்மை நிரூபிக்கப் படாததால் மனு நிராகரிக்கப்படுகிறது என்று அறிவித்தார் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி.

இந்தத் தகவல் கேட்டதும் விஷால் அதிர்ச்சி அடைந்தார்.

“இளைஞர்கள் தேர்தலில் நிற்க வந்தால் இப்படித்தான் செய்வதா? நான் இதை சும்மா விடமாட்டேன். தலைமைத் தேர்தல் ஆணையர் வரைக்கும் போவேன். நியாயம் கிடைக்கவில்லை என்றால் வழக்குப் போடுவேன். தேர்தலில் ஒரு சுயேச்சைக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்வேன்” என்ற விஷால்... “ஆர்.கே.நகரில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை” என்று திகைத்துப் போய் கூறினார்.

விஷால் சார்ந்த சினிமா உலகத்தையே மிஞ்சும் காட்சிகள் நேற்று ஆர்.கே.நகரில் அரங்கேறியிருக்கின்றன. ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் போகப்போக என்ன ஆகுமோ ஆர்.கே.நகர்?

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon