மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

அயோத்தி வழக்கு ஒத்திவைப்பு!

அயோத்தி வழக்கு  ஒத்திவைப்பு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான இறுதி விசாரணையை வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உச்ச நீதிமன்றம்.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் பாபர் மசூதி அமைவதற்கு முன்பு ராமர் கோயில் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன. சில நூற்றாண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்துவரும் நிலையில், அந்த நிலம் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்றோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில், கடந்த 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த நிலமானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ராம் லல்லா, நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்துக்கு மூன்று பகுதிகளாகப் பிரித்து வழங்குவதாக உத்தரவிட்டது. இதற்கு எதிராக, மூன்று தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்பு அமர்வில் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட 90 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உ.பி. மாநில அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஏற்கெனவே அறிவித்தவாறு, இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது, மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சன்னி வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், இவ்வளவு விரைவாக இந்த ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார். அதோடு, இந்த வழக்கை வரும் 2019 ஜூலை மாதத்துக்குப் பிறகே விசாரிக்க வேண்டுமென்றார்.

அடுத்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு வழக்கை நடத்த வேண்டுமென்று வற்புறுத்திய கபில்சிபல், இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் மற்றும் சமூகத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால், கபில்சிபலின் வாதத்துக்கு உத்தரப்பிரதேச மாநில வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். தினமும் விசாரணை நடத்தப்பட்டு, உடனடியாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குமாறு கோரினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாகத் தெரிவித்தது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.

இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால், எச்சரிக்கை உணர்வோடு இருக்கவும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் காக்கவும் மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அனுப்பியுள்ளது. போராட்டங்கள், பேரணிகள் நடக்குமென்பதால் சில இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon