மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: கரசேவை இப்போதைக்கு முடியாது!

சிறப்புக் கட்டுரை: கரசேவை இப்போதைக்கு முடியாது!

ஆழி செந்தில்நாதன்

(பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு (டிசம்பர் 6) 25 ஆண்டுகள் நிறைகின்றன. இந்த நிகழ்வு இந்திய அரசியல், சமூக, பண்பாட்டுக் களங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த பன்முக அலசல்களை மின்னம்பலம்.காம் தொடராக வெளியிடவிருக்கிறது. அந்த வரிசையின் முதல் கட்டுரை இது - ஆசிரியர்)

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதின் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒருநாள் முன்பாக, டிசம்பர் 5ஆம் தேதி, அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்காக வந்திருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கான அடித்தளமும் பாபர் மசூதியும் கரசேவகர்களால் நொறுக்கப்பட்டு சரியாக கால் நூற்றாண்டு காலம் ஓடிவிட்டது. நீதியின் மெதுநடை – அதை சரியென்பதா தவறென்பதா என்று தெரியவில்லை – இன்னமும் நம்பிக்கையை ஊட்டிக்கொண்டிக்கிறதா என்பதெல்லாம் தெரியவில்லை. இறுதி விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கப்போகிறது என்று நமக்குத் தெரியாது.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் இந்த வழக்கு தொடர்பான அரசியல் தீர்ப்பும் வரலாற்றுத் தீர்ப்பும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. தன்னுடைய நெடுங்கால இலக்கான இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான மிகப் பெரிய வியூகத்தில், இந்துத்துவ சக்திகள் ஆரவாரத்தோடு நுழைந்தது (இந்திய – பாகிஸ்தான் பிரிவுக்குப் பிந்தைய இந்தியாவில்) ராம் ஜென்ம பூமி இயக்கத்தினூடாகத்தான். அந்த இயக்கம் தேர்தலுக்கானது மட்டுமல்ல, இந்தியாவின் முகத்தை மாற்றுவதற்கானது. அந்த இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறதா? தயங்காமல் சொல்வேன். ஆம். அந்த இயக்கம் வெற்றி பெற்றுவிட்டது.

இந்து ராஷ்டிரம்?

20 கோடிப் பேர் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தில் 20 சதவிகிதமான முஸ்லிம்களை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு, அவர்களுடைய வாக்குகளையும் பங்கேற்பையும் திட்டமிட்டுத் தவிர்த்துவிட்டு, ஓர் அரசாங்கத்தை அங்கே இந்துத்துவ சக்திகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. இன்னொரு தடவை மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா இந்து ராஷ்டிரமாக ஆவது உறுதி என்று வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ராமனின் கதை இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்தியாவை அயோத்தி காண்டத்திலிருந்து யுத்த காண்டத்தை நோக்கிச் அழைத்துச் சென்றிருக்கிறது. அந்தப் பயணத்தில் மக்களைப் பிரிவுபடுத்தி, மதவெறியை ஊட்டி, சாதி விளையாட்டுகளை ஆடி, வடக்கு தெற்கு வித்தியாசங்களை ஊதிப் பெருக்கி, வளர்ச்சியின் பெயரால் ஓர் அரசு உருவாக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மற்றும் மேற்கு இந்திய உயர் சாதி இந்து நலன்களுக்கான பேரரசு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது வேறு கதை. ஆனால், இதெல்லாம் வெற்றிகள்தானே? அரசியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் இந்த இலக்கைக் கரசேவகர்கள் எட்டியிருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க இயலாது. முஸ்லிம்கள் இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா, மாநிலக் கட்சிகள் இல்லாத இந்தியா, கம்யூனிஸ்ட்கள் இல்லாத இந்தியா என அவர்கள் விடியற்காலைக் கனவுகளை இப்போது கண்டுவருகிறார்கள்.

இந்து ராஷ்டிரக் கனவு எவ்வளவு பழையதோ அதே அளவுக்கு பழையது இந்தச் சிக்கலும்கூட. எனவே முழு இந்து ராஷ்டிரம் அமையும்வரை அயோத்திச் சிக்கல் ஓயாது. 1528இல் பாபரின் படைத் தளபதி மீர் பாகி என்பவரால் கட்டப்பட்டது பாபர் மசூதி. அது கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் ஒரு கோயில் இருந்தது என்பது இந்துத்துவவாதிகளின் வாதம். மசூதி குறித்த சர்ச்சை நீண்ட காலமாக இருந்துவந்தாலும், 1949இல், சில இந்து அமைப்பினர் மசூதியில் திருட்டுத்தனமாக ராமர் சிலையைக் கொண்டுவந்து வைத்த பிறகு ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்துக்குப் பிறகு, இந்த மசூதியில் தொழுகைகள் நடத்தப்படவில்லை. அப்போதே முதல் வெற்றி ஈட்டப்பட்டுவிட்டது. இந்த மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் மிக முக்கிய நோக்கமாக இருந்துவந்த ஒரு திட்டத்தின் முதல் வெற்றி அது,

தொடரும் வெற்றிகள்

பிறகு சட்டரீதியிலான போராட்டங்களும் தொடர்ந்தன. எண்பதுகளில், ஆர்எஸ்எஸ் வழிகாட்டலின்படி, அப்போது சங் குடும்பத்தின் தீவிர முகமாக இருந்துவந்த விஸ்வ இந்து பரிஷத்தும் தேர்தல் அரசியலில் புதிய வியூகத்தை வகுத்துக்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியும் “ராமர் பிறந்த இடத்தை விடுவிப்பதற்கான” இறுதிப் போருக்குத் தயாரானார்கள். அவர்களது நீண்ட நெடிய பிரசார யுத்தம் 90களின் தொடக்கத்தில் பலனளிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 1990இல் – அப்போது வி.பி.சிங் தலைமையிலான பாஜக ஆதரவுள்ள தேசிய முன்னணி அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற முயன்றபோது – பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரையைத் தொடங்கினார். குஜராத்தின் சோம்நாத்திலிருந்து தொடங்கிய அந்த ரத யாத்திரை, ரத்த யாத்திரை என்றே வரலாற்றில் பெயர்பெற்றது. போகும் வழியெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை உருவாக்கிச்சென்ற அந்த யாத்திரை அதன் இறுதி இலக்கிடமான பீகாரை அடைய முற்பட்டபோது ஜனதா தளத் தலைவராகவும் முதல்வராகவும் இருந்த லாலு பிரசாத் யாதவ் அதைத் தடுத்து நிறுத்தினார். வட இந்தியாவின் ஒட்டுமொத்த சாவர்ண சாதியினரும் வி.பி.சிங் ஆட்சிக்கு உடனடியாக முடிவுரையை எழுதினார்கள். வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பிற்படுத்தப்பட்டோர் கனவைச் சிதைத்தது ஒன்று, முஸ்லிம்களை அதிகாரமிழக்கச் செய்வது மற்றொன்று. இது வெற்றிதானே!

1992இல், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதற்குப் பிந்தைய முதல் ஆண்டில், பி.வி.நரசிம்ம ராவின் ஆட்சிக் காலத்தில், தங்கள் நெடுங்காலக் கனவை நிறைவேற்றும்விதமாக, அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர் சங் பரிவாரப் படையினர். அந்த படுபாதகச் செயலைச் செய்ய அவர்கள் ஒருநாள் குறித்துவைத்திருந்தார்கள். அந்த நாள் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள். டிசம்பர் 6. காங்கிரஸின் நெடுங்கால மதச்சார்பின்மை அரசியலை நரசிம்ம ராவ் மூலமாக காவுகொண்டது ஒருபுறம். அம்பேத்கரின் நினைவு நாளை அவமானப்படுத்தியது மறுபுறம். இதெல்லாம் வெற்றிப் படலங்கள்தானே!

மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்னும் பின்னும் குறிப்பாக வட இந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பல மதத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிறகு மத்தியில் பாஜக ஆளும்போது அந்த சர்க்கார்களாலும் உச்ச நீதிமன்றத்தாலும் இந்த பிரச்னை பதில் அளிக்கப்படாத கேள்வியாகவே தொடர்ந்துவந்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்று சங் பரிவாரங்கள் விடாமல் கூறிவருகிறார்கள். அடுத்த ஆண்டு அக்டோபரில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என்று இந்துத்துவ சக்திகள் அறிவித்துவிட்டன. இன்று தொடங்கும் இறுதி விசாரணையின் முடிவில் வரக்கூடிய தீர்ப்பு என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், நீதிமன்றத்துக்கு வெளியே எல்லாம் கனஜோராக நடைபெறுகிறது.

இந்த பாஜகவின் ஆட்சியில், இந்த நீதித்துறையின் கீழ் ‘கட்டப் பஞ்சாயத்து’மூலம் இதைத் தீர்த்துக்கொள்ளலாமே என்கிற கார்ப்பரேட் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோரின் திட்டங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் உத்தரப் பிரதேசத்து முஸ்லிம்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் சங்கி மனம் குதூகலிக்கும்.

முஸ்லிம்களின் நிலை

பாஜக ஆட்சியின் பலமான கரங்களுக்குள் சிக்கியிருக்கும் உ.பி. முஸ்லிம்களைப் பொறுத்தவரை நம்பிக்கை அவர்களது விரல் இடுக்குகளிலிருந்து வேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது. அண்மையில், ஷியா வாரியம் ஒரு யோசனையைத் தெரிவித்தது. அயோத்தியில் அவர்கள் ராமர் கோயில் கட்டிக்கொள்ளட்டும், நாம் லக்னோவில் ஒரு மசூதியைக் கட்டிக்கொள்வோம் என்று அது கூறிய யோசனையை முஸ்லிம் அமைப்புகள் பலவும் நிராகரித்தன. ஆனால், இப்படி நிலைகுன்றிப் போவதற்குக் காரணம் இல்லாமலில்லை. 2010 டிசம்பர் 30இல் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும்கூட என்னதான் ஆயிற்று? அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குட்பட்ட நிலத்தை மூன்று கூறாக்கி, இரு கூறினை இந்துக்களுக்கும் ஒரு கூறினை முஸ்லிம்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறிய அந்தத் தீர்ப்பு எந்த சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்தது? லிபர்ஹான் கமிஷன் பாபர் மசூதி இடிப்பு தன்னிச்சையான செயல்பாடும் அல்ல, திட்டமிடப்படாத நடவடிக்கையும் அல்ல என்று கூறி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரை நோக்கிக் குற்றச்சாட்டினைச் சுட்டியதே, என்ன ஆயிற்று அதெல்லாம்?

இறுதியில் முஸ்லிம்கள்தான் பின்வாங்க வேண்டியிருக்கிறது. அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். இந்த நிலத்தை விட்டுக்கொடுத்து விடலாம் என்று அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரியம் தயாராக இருக்கிறது. முடியாது என இளம் முஸ்லிம் அமைப்புகள் மறுக்கலாம். தோல்வியோ பெருந்தன்மையோ இந்திய முஸ்லிம் சமூகம் அயோத்தியில் மல்லுகட்டி ஆகப் போவதில்லை என்கிற உணர்வு முஸ்லிம்கள் மத்தியில் எழுவது மட்டுமின்றி, அவர்கள் அவ்வாறாக சிந்திக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்துத்துவ அமைப்புகளைப் பொறுத்தவரை, அங்கே ராமர் கோயிலைக் கட்டுவது என்பதில் சமரசமே செய்துகொள்ள முடியாத நிலைக்குத் தங்கள் மதத்தவர்களை உள்ளாக்கி வருகிறார்கள். ஒருவேளை இந்துக்கள் வெற்றியையும் முஸ்லிம்கள் தோல்வியை அல்லது சமரசத்தையும் அடைவார்களேயானால், பாபர் மசூதி அரசியல் தொடரத்தான் செய்யும்.

இந்து ராஷ்டிரத் திட்டத்தை இங்கே யாரும் எதிர்க்க ஆளில்லை என்றுதான் அதற்கு அர்த்தமாகும். உ.பியில் அதுதான் நடக்கிறது. ஒருவேளை இதற்கு எதிர்மாறாக நடக்கத்தொடங்குமேயானால் பிரச்னை தீராது, மாறாக தீவிரமாக ஆகும்.

இன்று சங் பரிவாரத்தின் கைகள் ஓங்கும் அதேவேளையில் ஜனதா பரிவாரத்தின் கைகள் தாழும் நிலை உ.பியில் ஏற்பட்டிருக்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலும் பின்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலும் உபியை பாஜகவிடம் ஒப்படைத்துவிட்டன. ஆனால், உச்சத்துக்குச் சென்றவர்கள் அதற்கு மேல் போக இடமில்லை.

வென்றால் தெம்பு, தோற்றால் வெறி

நடந்து முடிந்த உ.பி உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்கள் பிஎஸ்பி பக்கம் நகர்ந்திருக்கிறார்கள் என்கிற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்வதானால், மீண்டும் தொண்ணூறுகள் திரும்பக்கூடும். வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட பாஜகவின் சாதிக் கணக்கு முதன்முறையாக உ.பி.யிலும் – சம காலத்தில் குஜராத்திலும் – அடிவாங்கத் தொடங்கியுள்ளன. உ.பியைப் பொறுத்தவரை, பாஜக ஒரு புறமும், பிஎஸ்பி, சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் மக்கள் மறுபுறமுமான ஒரு நெடும்பிளவு அநேகமாக ஓரிரு ஆண்டுகளில் சாத்தியமாகலாம். காங்கிரஸ் சற்றே மீண்டெழுந்தாலும்கூட, இது அனைத்திந்திய அளவில் பாஜகவின் ‘2019 ஆட்டோமேட்டிக் வெற்றிப் பயண’த்துக்கு முட்டுக்கட்டையாக மாறலாம்.

ஆனால், இது பாஜகவினருக்கு அச்சத்தைத் தராது. மாறாக, கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்து ராஷ்டிரத்தின் முன்னோடி அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்களை அது வெறிகொள்ளச்செய்யும். டெல்லியிலும் லக்னோவிலும் தங்களுடைய ஆட்சி தொடர்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் வல்லமை பெற்றவர்கள் மோடியும் ஆதித்யநாத்தும் அமித் ஷாவும்.

ஆக, கள நிலைகள் எவ்வாறு மாறினாலும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்குப் பிறகு எதுவும் மாறிவிடப் போவதில்லை. வெற்றி பெற்றால் பாஜக தெம்போடு எழுந்து நிற்கும். கோயில் கட்டுவதற்குச் சிக்கல் ஏற்படுமானால், அது வெறியோடு எழுந்து நிற்கும்.

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: ஆழி செந்தில்நாதன்

தன்னாட்சித் தமிழகம் என்கிற அரசியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். மொழிசார் அரசியல் குறித்த ஆழமான சிந்தனைகளைப் பல தளங்களிலும் முன்வைத்து வருபவர். தொடர்புக்கு [email protected]

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon