மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 28 ஜன 2020

டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை!

டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை!

இந்தியாவின் டிஜிட்டல் சார்ந்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளை டிசம்பர் 14ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் சந்திக்கிறார்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசானது மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, 100 ஸ்மார்ட் சிட்டி, 50 மெட்ரோ திட்டங்கள், ஸ்வச் பாரத் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் சுமார் மூன்று கோடி வேலைவாய்ப்புகள் 2025ஆம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் முன்னதாக ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதில், மின்னணு துறையில் 89 லட்சம் வேலைவாய்ப்புகளும், தொலைத் தொடர்புத் துறையில் 88 லட்சம் வேலைவாய்ப்புகளும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 65 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஐ.பி.எம்., விப்ரோ, கூகுள், மைக்ரோசாஃப்ட், டெக் மகிந்திரா, இண்டெல் கார்பரேஷன், பேனசோனிக் இந்தியா, குயிக்கீல், பிராக்டோ, ஹைக், லாவா இண்டர்நேஷனல், சையண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளை ரவி ஷங்கர் பிரசாத் சந்தித்திருந்தார். இந்நிலையில் அதேபோன்றதொரு கூட்டம் டிசம்பர் 14ஆம் தேதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் இந்நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் செயல்பாடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை 2022ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்தும் முயற்சியிலேயே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon