மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

ஹெல்த் ஹேமா - கருணைக்கிழங்கு, வெண்டைக்காய் மருத்துவக் குணங்கள்!

ஹெல்த் ஹேமா - கருணைக்கிழங்கு, வெண்டைக்காய் மருத்துவக் குணங்கள்!

எந்தப் பொருளை பயன்படுத்துகிறோம் என்பதைக்காட்டிலும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. சமையலில்கூட காய்கறிகளில் வெண்டைக்காய் என்றாலே முகம் சுளிப்பர். கருணைக்கிழங்கு என்றாலே கதறி ஓடுவர். ஆனால், அத்தனை மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை, உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பது நமக்கு தெரியும்தான். ஆக, எப்படி சமைத்துக் கொடுத்தால் இந்த வெண்டைக்காயை, கருணைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்கள் என்றெல்லாம் நேரம் கிடைக்கும்போது நம் மின்னம்பலம் கிச்சன் கீர்த்தனாவிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். ஆனால், என்னன்ன நன்மைகள் உள்ளன என்பதை நான் சொல்கிறேன்.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தைச் சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது. மலச்சிக்கல் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும்.

நாள்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும். பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலைத் தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கைச் சாப்பிட்டால் உடல்வலி காணாமல் போய்விடும்.

மூலநோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்திவந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்னைகள் சரியாகிவிடும்.

உடல் எடை குறைவதற்கும் பெரும் உதவி புரிகிறது.

கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியதும்கூட.

ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம். இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதயநோய்கள் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது. தவிர, இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், புற்றுநோய்க்குக் காரணமான செல்களின் வளர்ச்சியையும் தவிர்க்கக் கூடியவை.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon