மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

குழந்தைகளுக்கான மெசன்ஜர் செயலி அறிமுகம்!

குழந்தைகளுக்கான மெசன்ஜர் செயலி அறிமுகம்!

குழந்தைகள் தங்களது பெற்றோருக்குக் குறுந்தகவல் அனுப்ப முகநூல் நிறுவனம் மெசன்ஜர் கிட்ஸ் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

குழந்தைகள் பயன்படுத்துவதற்கென பிரத்யேக செயலியை முகநூல் வெளியிடுகிறது. குறுந்தகவல் அனுப்பும் வசதிகொண்ட புதிய செயலி குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் அவர்கள் அங்கீகரித்த நண்பர்களுடன் குறுந்தகவல் அனுப்பி சாட் செய்ய முடியும்.

முகநூல் விதிகளின்படி சேவையைப் பயன்படுத்த முடியாத 13 வயதுக்கும் குறைவான குழந்தைகள் புதிய செயலியை இலவசமாகப் பயன்படுத்த முடியும். பெற்றோர் கட்டுப்படுத்தக்கூடிய அம்சங்கள் நிறைந்த மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் குழந்தைகளால் தங்களது நண்பர்களைச் சேர்க்கவோ, குறுந்தகவல்களை அழிக்கவோ முடியாது.

குழந்தைகள் விரும்பும் நண்பர்களைச் செயலியில் அனுமதிப்பது, குறுந்தகவல்களை அழிப்பது போன்றவற்றை பெற்றோர் மட்டுமே செய்ய முடியும். மேலும் குழந்தைகளுக்கு என முகநூல் அல்லது மெசன்ஜர் கணக்கு வழங்கப்பட மாட்டாது. மாற்றாக இந்தச் செயலி பெற்றோர் பயன்படுத்தும் முகநூல் கணக்கிலேயே எக்ஸ்டென்ஷன் போன்று வழங்கப்படும்.

புதிய செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் முதற்கட்டமாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மெசன்ஜர் கிட்ஸ் செயலி ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் மெசன்ஜர் கிட்ஸ் செயலி அமேசான் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குக் கிடைக்கும் அம்சங்கள்:

வீடியோ சாட்: பெற்றோர் அனுமதித்த நண்பர்களுடன் குழந்தைகளால் வீடியோ சாட் செய்ய முடியும். பெற்றோர் அனுமதித்த நண்பர்கள் மட்டுமே குழந்தைகளுக்கான செயலியின் ஹோம் ஸ்கிரீனில் தெரிவார்கள்.

ஃபில்ட்டர்: இந்த அம்சம்கொண்டு குழந்தைகளால் பல்வேறு மாஸ்க், எமோஜி மற்றும் சவுண்டு எஃபெக்ட்களை பயன்படுத்தி மகிழ முடியும்.

சாட்: மெசன்ஜர் கிட்ஸ் செயலியைக் கொண்டு குழந்தைகளால் புகைப்படம், வீடியோ மற்றும் டெக்ஸ் மெசேஜ்களை தங்களது பெற்றோர் அனுமதித்த காண்டாக்ட்களுக்கு மட்டும் அனுப்ப முடியும்.

குழந்தைகளுக்கான சாதனத்தில் மென்ஜர் கிட்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்ததும், பெற்றோர் தங்களது முகநூல் கணக்கு மூலம் அங்கீகரிக்க வேண்டும். எனினும் குழந்தைகளுக்கு எனத் தனி கணக்கு எதுவும் உருவாக்கப்பட மாட்டாது. மேலும் பெற்றோர் கணக்குகளைப் பயன்படுத்தும் வசதியைக் குழந்தைகளுக்கு வழங்காது. புதிய செயலியில் குழந்தைகளுக்கு என புதிய கணக்கு மட்டுமே துவங்கப்படும். மற்றபடி குழந்தைகளின் பயன்பாடு முழுவதையும் பெற்றோர் கட்டுப்படுத்த முடியும்.

புதிய மெசன்ஜர் கிட்ஸ் செயலி குழந்தைகள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், அனைத்து டூல்கள் மற்றும் ஃபில்ட்டர்களும் குழந்தைகளுக்கான ஒன்றாகவே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிஃப்களும் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. மெசன்ஜர் செயலியில் வரம்பு மீறும் நடவடிக்கைகளைக் குழந்தைகள் தெரிவிக்கும் வசதி வழங்கப்படுகிறது. மேலும், இதுகுறித்து பெற்றோருக்கும் நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.

முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான செயலி என்பதால் மெசன்ஜர் செயலியில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது என்றும் முகநூல் தெரிவித்துள்ளது.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon