மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

விடியலைக் காணாத பருத்தி விவசாயிகள்!

விடியலைக் காணாத பருத்தி விவசாயிகள்!

பருத்தி விவசாயிகளின் வாழ்க்கை விடியலைக் காணாமல் இரவைப் போலவே இருப்பதாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த விவசாயச் சங்கத் தலைவரான பஷா படேல் கூறுகிறார்.

இந்தியாவின் முன்னணி பருத்தி உற்பத்திப் பகுதிகளான மகாராஷ்டிரா, தெலங்கானா, ஹரியானா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ளது. கடுமையான மழை, பூச்சித் தாக்குதல், பி.டி.3 வகை பயிரிடல் போன்ற காரணங்களால் பருத்தி தரம் குறைந்து உற்பத்தி பெருமளவு சரிந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். நடப்பு பருவத்தில் பருத்திக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக (எம்.எஸ்.பி) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,320 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பருத்தி தரம் குறைந்ததால் பெரும்பாலான பகுதிகளில் விலை சரிந்து குறைந்தபட்ச ஆதர விலையை விட ரூ.500 முதல் ரூ.600 வரை குறைவாகவே விவசாயிகள் பெறுகின்றனர்.

இந்த நிலையில் பிசினஸ்லைன் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள பஷா படேல் கூறுகையில், “நடப்பு பருவத்தில் பிங்க் பால்வோர்ம் பூச்சித் தாக்குதலால் பருத்தி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் இந்தப் பூச்சித் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் யாவத்மால் மாவட்டத்தில் சில விவசாயிகள் மரபணு மாற்று விதை அல்லாத இந்திய விதைகளைப் பயிரிட்டுள்ளனர். அந்தப் பயிர்களின் மீது பூச்சித் தாக்குதல் ஏற்படவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியச் சந்தைகளில் பருத்திக்கான மரபணு மாற்று விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஓர் ஏக்கருக்கு 22 குவிண்டால் பருத்தி உற்பத்தியாகும், பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்படாது என்று கூறி விற்றனர். ஆனால், இன்று நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த ஆண்டில் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,300 நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,500 வரை கிடைத்தது. நடப்பு பருவத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாகவே கிடைத்து வருகிறது. பருத்தி விவசாயிகளின் வாழ்க்கை விடியலைக் காணாமல் இருளாகவே உள்ளது” என்று கூறியுள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon