மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 அக் 2019

கதைதான் முக்கியம்: ரம்யா

கதைதான் முக்கியம்: ரம்யா

‘என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்’ என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியிருக்கும் சத்யா திரைப்படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்தப் படத்துக்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரம்யா நம்பீசன் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் தனது கதை தேர்வு குறித்தும் பகிர்ந்துள்ளார்.

“நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே நம்புவேன். சத்யா படத்தைப் பொறுத்தவரை என் கதாபாத்திரத்தின் பெயர் ஸ்வேதா. சத்யா தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஷனம் படத்தின் ரீமேக்காகும். மற்ற மொழிகளில் நடிப்பதனால் தமிழில் கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். சத்யா படத்தைத் தொடர்ந்து ‘நட்புனா என்னானு தெரியுமா’ படம் வெளியாகவுள்ளது. என்னைப் பொறுத்தவரை புதுமுகமாக இருந்தாலும் கதைதான் முக்கியம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “சேதுபதி படத்தில் அம்மாவாகவும், ஒருநாள் ஒருகனவு படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாகவும் நடித்திருக்கிறேன். அதன்பின் ராமன் தேடிய சீதை, குள்ள நரி கூட்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன். தங்கையாக நடித்தால் கடைசி வரை தங்கையாகத் தான் நடிக்க வேண்டி இருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன்” என்று தனது திரைப்பயணம் குறித்து தெரிவித்துள்ளார் ரம்யா.

ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைமன் கிங் இசையமைப்பாளராகவும், அருண்மணி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்திருக்கும் இந்தப் படத்தை சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon