மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ஏற்றுமதியில் அசத்தும் பாசுமதி!

ஏற்றுமதியில் அசத்தும் பாசுமதி!

ஈரான் மற்றும் மேற்காசிய நாடுகளில் பாசுமதி அரிசிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு விளைச்சலில் நல்ல விலை கிடைத்துள்ளது. நெல் சாகுபடியில் காரிஃப் கால விளைச்சல் கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதால் சந்தைகளின் வரத்துக் கணிசமாக உயர்ந்துள்ளது என கர்னல் மற்றும் பாத்தேபாத் மண்டியைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கர்னல் சந்தையின் வேளாண் விற்பனை சந்தை செயலாளர் ஆஷா ராணி தெரிவிக்கையில், “ஏற்றுமதியில் நல்ல விலை கிடைப்பதால் தரமான அரிசிகளின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நீளமான 1121 வகையைச் சேர்ந்த அரிசிகளுக்கு ஈரான், ஈராக், மேற்கு ஆசிய நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதையடுத்து பாசுமதி வகை அரிசிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கர்னல் மண்டியின் வரத்து 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த சீசனின் இலக்கை அடைந்துவிட்ட போதிலும், விவசாயிகளின் பொருள்களைத் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கர்னல் மண்டியில் நவம்பர் மாதம் வரை 3.48 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்ட நெல், இந்த ஆண்டு நவம்பர் 21 வரையில் 4.24 லட்சம் டன்களாகப் பதிவாகியுள்ளது. ஹரியானாவிலுள்ள பாத்தேபாத் மண்டியைச் சேர்ந்த கமிஷன் வியாபாரியான ரோஹித் பன்சால், “கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.1,400 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 30,000 மூட்டை நெல் விற்பனைக்கு வருகிறது” என்று கூறியுள்ளார்.

புதன், 6 டிச 2017

chevronLeft iconமுந்தையது