மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 20 பிப் 2020

பிரம்மாண்ட புருஷகாரம்!

 பிரம்மாண்ட புருஷகாரம்!

புருஷகாரத்தின் உச்சம் பற்றி நாம் பார்த்தோம். அதாவது பிராட்டியாரின் கருணையே பிராட்டியாரின் இரக்கமே, பிராட்டியாரின் பெருந்தன்மையே புருஷகாரம் எனப்படுகிறது.

ஆண்டாள் தன் பாசுரத்தில் கண்ணனை அடைய நப்பின்னையின் கருணையை, பரிவை, சிபாரிசை நாடுகிறாள். அதாவது நப்பின்னையின் புருஷகாரத்தை நாடுகிறாள். அதுபற்றி பார்த்தோம்.

என் திருமகள் சேர் மார்வனே என்னும்
என்னுடை ஆவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து, நீ கொண்ட
நிலமகள் கேள்வனே! என்னும்
அன்று உரு ஏழும் தழுவி, நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே! என்னும்-
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே

ஆழ்வார்களில் தலையாய ஆழ்வாரான நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் இது.

இந்தப் பாசுரம் என்ன வகையில் எழுதப்பட்டது என்றால் ஒரு பெண் மொழியில் எழுதப்பட்டது. அதாவது திருவரங்கத்தின் அழகான அரங்கனை அடைய ஒரு பெண் ஆசைப்படுகிறாள். இதை அவளது தாய் அறிந்துகொள்கிறாள்.

மகளின் மனதை எப்படியாவது தாய் கண்டுபிடித்துவிடுவாளே... அதுபோல தன் மகளின் மனதில் அரங்கன் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறாள் அந்தத் தாய். தன் மகள் அரங்கனை நினைத்து அல்லும் பகலும் இருப்பதை அறிந்து நேரடியாக அரங்கனிடமே முறையிடுகிறாள் தாய்.

அந்த தாய் மொழியாகத்தான் இந்தத் திருவாய்மொழியை வடிக்கிறார் நம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தில் திருமாலின் மூன்று தேவியர்களையும் தனது மகளின் காதலுக்காக வேண்டுகிறாள் அந்த தாய்.

ஆண்டாளாவது நப்பின்னை என்ற ஒரு பிராட்டியினை மட்டுமே வேண்டினாள். ஆனால் நமது நம்மாழ்வாரோ பிராட்டியரின் தாய்மையுடைய வல்லமை உணரப் பெற்றவர் என்பதால் மூன்று தேவியரையும் சேர்த்துக் குளிர்விக்கிறார்.

முதல் வரியிலேயே... ‘என் திருமள் சேர் மார்வனே...’ அதாவது திருமகளை மார்பிலே கொண்டவனே நீயே என் ஆவி என்கிறாள். அதாவது நாராயணன் என்பவனை தனியாக வணங்காமல் எடுத்த எடுப்பிலேயே திருமகளின் அருளைப் பெறுவதற்காகத்தான் இந்த வரி. திருமகளின் தாய்மையை தட்டியெழுப்பும் முயற்சி இது.

அடுத்து... ’நிலமகள் கேள்வனே’ என்று அந்தத் தாயின் குரலில் திருமாலை அழைக்கிறார் நம்மாழ்வார். ஸ்ரீதேவியை போற்றிவிட்டோம்... இதைக் கேட்டு திருமாலின் இன்னொரு பிராட்டியான பூதேவி அதாவது நிலமகள் வருத்தப்பட்டு தன் மகளுக்காக சிபாரிசு செய்யாமல் இருந்துவிடப் போகிறாளே என்ற எண்ணத்தோடுதான் அடுத்த வரியிலேயே நிலமகள் கேள்வனே என்று அந்த தாய் மொழியாக திருவாய்மொழியில் அழைக்கிறார் நம்மாழ்வார்.

இப்போது ஸ்ரீதேவியையும், பூதேவியையும் கொண்டு திருமாலை விளித்தாயிற்று. அடுத்து ஒருத்தி இருக்கிறாள். அது கண்ணனின் நப்பின்னை. ஆண்டாள் பாசுரத்தில் பார்த்தோமே, அந்த நப்பின்னைதான்.

மூன்றாவது வரியிலேயே நப்பின்னையை துணைக்கு அழைத்துவிட்டாள் அந்தத் தாய்.

ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே...

என்றால் ஏழு பெருங்காளைகளைத் தழுவி அடக்கி நப்பின்னையின் அன்பனான கண்ணனெ என்று அழைக்கிறாள். அதாவது பிராட்டிகளின் சிபாரிசை, கருணையை, இரக்கத்தைப் பெறுவதற்காத்தான் இந்த மூன்று நாம புகழ் ஏற்பாடு.

அந்தத் தாய் அரங்கனிடம் சொல்கிறாள்....’ அரங்கனே... உன்னை என் பெண் எப்படியெல்லாம் அழைக்கிறாள் தெரியுமா? திருமகள் சேர் மார்வனே என்று கூப்பிடுகிறாள். நிலமகள் கேள்வனே என்று அழைக்கிறாள். ஆய் மகளின் அன்பனே என்று உருகுகிறாள். இப்படியாக மூன்று தேவியரையும் அடிப்படையாக வைத்து உன்னையே நினைத்து உருகும் என் மகளின் துயரத்துக்கு என்னதான் முடிவு... சொல் அரங்கா சொல்’ என்கிறாள்.

ஆக ஆண்டாள் கண்ணனை அடைவதற்காக நப்பின்னையை மட்டும்தான் வேண்டினாள். நப்பின்னையின் புருஷகாரத்தைத்தான் வேண்டினாள். ஆனால்... இங்கே அரங்கன் மீது அன்பு கொண்ட பெண் திருமாலின் மூன்று தேவியரையும் முன் வைத்து வேண்டுகிறாள்.

ஆக தெரிகிறதா இப்போது புருஷகாரத்தின் பிரம்மாண்டம்! அதுதான் நம்மாழ்வார்.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான ஜெகத்ரட்சகன் பாசுரங்களின் பொருள் சொல்லி பரமனின் அருள் சொல்லும் பேருரைகளை பல காலமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட பேருரைகளைக் கேட்பவர்கள் வைணவத்தின் தேன் தமிழை தங்கள் மனதை விட்டு அகலவிடவே மாட்டார்கள்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon