மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 20 பிப் 2020

விஷால், தீபா வேட்பு மனு நிராகரிப்பு!

விஷால், தீபா வேட்பு மனு நிராகரிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் மற்றும் தீபாவின் வேட்புமனுக்கள், இன்று (டிசம்பர் 5) தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (டிசம்பர் 4) முடிவடைந்தது. சுயேச்சை வேட்பாளர்களாகப் போட்டியிட, நடிகர் விஷால் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் தீபா ஆகியோர் நேற்று மாலை மனுதாக்கல் செய்தனர்.

ஆர்.கே.நகரில் இன்று (டிசம்பர் 5) காலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. விஷால் வேட்புமனு பரிசீலனைக்கு வந்தபோது, அவரது மனுவில் இருந்த முன்மொழிபவர்களின் கையெழுத்து பற்றி சந்தேகம் எழுந்ததால், அவரது மனுவின் மீதான பரிசீலனையின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் 10 பேர், விஷாலின் வேட்புமனுவை முன்மொழிய வேண்டும் என்பது சட்ட விதி. இவர்கள் சரியான அடையாள அட்டை உட்பட பல ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு விஷால் வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்களில் 2 பேரின் கையெழுத்து தவறாக உள்ளதாகத் தெரிவித்து, விஷாலின் வேட்புமனுவை நிராகரித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு விழும் வாக்குகளை குறிவைத்து விஷால் தேர்தலில் இறங்குகிறார் என்றும், இவரது பின்னணியில் தினகரன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கேற்றவகையில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதே பிரசாரத்தில் இறங்கினார் விஷால். இந்தநிலையில், அவர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானபோது, ஆர்.கே.நகரில் விஷால் இல்லை. சில நிமிடங்களில் அங்குவந்த விஷால், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டார். முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தும், சிலரது முயற்சியால் வேண்டுமென்றே விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். விஷால் சாலை மறியலில் அமர்ந்ததும் அவரது ஆதரவாளர்களும் புடை சூழ அமர, அந்த பகுதியே பரபரப்பானது. இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார், விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். விஷால் கைது செய்யப்பட்டதாக அறிவிப்பு எதுவும் வரவில்ல.

இதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவின் வேட்புமனுவும் இன்று நிராகரிக்கப்பட்ட்து. இவரது வேட்புமனுவில் ’படிவம் 26’ நிரப்பப்படவில்லை எனவும், விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் முழுமையில்லை எனவும் இதற்கு காரணம் தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய தீபா பயங்கரமான புகார்களை அடுக்கினார்.

“இது முழுக்க முழுக்க திட்டமிட்ட சதி. நீங்கள் போட்டியிடக்கூடாது, மீறி போட்டியிட்டால், நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த ஒரு தலைவர் என்னிடம் பேசினார். கடந்தமுறை போட்டியிட மனு செய்தபோதும், ஆசிட் ஊற்றுவோம், வேட்புமனுவை நிராகரிக்க வைப்போம் என்று மிரட்டினார்கள். இந்த முறை அதனைச் செய்திருக்கிறார்கள். அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறித்துவிடுவேன் என்று எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் நியாயமாக நடக்கவில்லை’’ என்று கூறினார் தீபா.

செவ்வாய், 5 டிச 2017

அடுத்ததுchevronRight icon