மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த ஒருவருடத்தில் எத்தனை குழப்பங்கள்.. எத்தனை மாற்றங்கள்... எத்தனை பிளவுகள் என அவர் கட்டிக்காத்த அதிமுக சிதறிவிட்டது. ஆட்சி தொடர்ந்தாலுமே கூட ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிக்கல்களுடன் தான் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி.

எம்.ஜி.ஆர் நினைவு நாளில் பட்டி தொட்டியெல்லாம் இன்னும் கூட, அவரது படத்தை வைத்து மாலை போட்டு வாழைப் பழத்தில் ஊதுபத்தி கொளுத்தி வைத்திருப்பார்கள் அவரது ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும். எம்.ஜி.ஆருக்கு இருந்த அதே மவுசு இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கும் இருந்ததை தமிழகம் முழுக்கவே பார்க்க முடிந்தது. பேருந்து நிலையங்கள், சாலைகளின் சந்திப்புகள் என திரும்பிய பக்கமெல்லாம் ஜெயலலிதா போட்டோவில் சிரித்தபடி இருந்தார். சசிகலா மீது கோபமும், எடப்பாடி மீது அதிருப்தியும் இருந்தாலுமே அதிமுகவினரையும் தாண்டி பொதுமக்களும் கூட ஜெயலலிதா படத்தை வைத்து நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய காட்சிகளையும் பார்க்க முடிந்தது. சென்னையில் ஜெயலலிதா நினைவு நாளில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய தகவல்கள் எல்லாம் மின்னம்பலம் செய்திகளில் விரிவாகவே இருக்கிறது.

பெங்களூரு நிகழ்வுகளை நான் சொல்கிறேன். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது விருப்பம். கடந்த வாரத்தில் இது சம்பந்தமாக விவேக்கிடம் பேசி இருக்கிறார். அவர்களது வழக்கறிஞர்களிடமும் இது சம்பந்தமாக டிஸ்கஷன் நடந்திருக்கிறது. ‘ரத்த வழி சொந்தம் இறந்தால் மட்டுமே பரோல் கிடைக்கும். கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக பரோலில் வெளியே வந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இறந்தவர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்காக என்று பரோல் கேட்க முடியாது. அப்படி கேட்டாலும், பரோலுக்கு வாய்ப்பே இல்லை’ என வழக்கறிஞர் சொல்லிவிட்டாராம்.

இந்த தகவல் சசிகலாவுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘நான் சமாதிக்குப் போகவில்லை என்றாலும் பரவாயில்லை. சிறைக்குள்ளேயே அக்கா போட்டோவை வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்த எனக்கு அனுமதி வேண்டும். அதுக்காக எனக்கு அக்கா போட்டோவும், அன்று காலையில் ஒரு மாலையும் வேணும். அதுக்கு அனுமதி வாங்கிக் கொடுங்க...’ என கேட்டிருக்கிறார். சிறையில் உள்ள அதிகாரிகளிடம் பேசி அதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. கண்ணாடி பிரேம் இல்லாமல், லேமினேஷன் செய்யப்பட்ட படத்தை மட்டும் உள்ளே கொண்டு வர அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பெங்களூரு புகழேந்தி மூலமாக நேற்று ஜெயலலிதாவின் படம் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. அத்துடன் படத்துக்கு ஏற்ற சைசில் மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். ஜெயலலிதா படத்தையும் மாலையையும் உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.

இன்று, வழக்கத்தைவிட முன்கூட்டியே எழுந்துவிட்டாராம் சசிகலா. காலை 6 மணிக்கெல்லாம் குளித்துவிட்டுத் தயாரானவர், ஜெயலலிதா படத்துக்கு மாலையைப் போட்டு அதற்கு முன்பாக கண்களை மூடியபடியே அமர்ந்து கொண்டாராம். சரியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கண்களைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார் சசிகலா. அதன் பிறகு, அந்தப் படத்தைப் பார்த்து அழுதபடியே இருந்திருக்கிறார். சசிகலா சிறைக்குள் இருந்தாலும், எந்த தகவலை வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் விவேக்கிற்கு சொல்ல, சில அதிகாரிகள் உதவியாக இருக்கிறார்கள். அப்படித்தான் இன்று விவேக்கிற்கு ஒரு தகவல் பரிமாறப்பட்டு இருக்கிறது.

‘எதாவது ஆசிரமத்துக்குப் போய் இன்றைக்கு அவங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு வரச் சொல்லி நான் சொன்னதாக விவேக்கிட்ட சொல்லுங்க...’ என்பதுதான் அந்த தகவல். அதன்படிதான் விவேக்கும், அவரது மனைவி கீர்த்தனாவும் தாம்பரம் அருகே உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று மதியம், இரவு சாப்பாடுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். ‘அக்கா இறந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என்பதை நம்பவே முடியலை. எனக்கு என்னவோ அவங்க என் கூடவே இருக்கிற மாதிரிதான் இருக்கு... ‘ என்று சிறைக்குள் திரும்பத் திரும்ப சொன்னபடியே இருந்திருக்கிறார் சசிகலா. “ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த வாட்ஸ் அப், மெசேஜ் ஒன்றையும் தட்டியது. “ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என காரணம் சொல்லி இருக்கிறார்கள். ‘தீபாவை பொறுத்தவரை இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதால்தான் அவர் தேர்தலுக்குத் தயாரானார். ஆனால், தேர்தலில் போட்டியிட்டாலும் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் என்பது அவருக்கே தெரியும். அதனால்தான், விண்ணப்பத்தை அவர் முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தார். கடந்த முறை ஆர்.கே.நகரில் தீபா போட்டியிட்ட போது அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அப்போது சரியாகப் பூர்த்தி செய்தவருக்கு இப்போது தெரியாமல் போயிருக்குமா... எல்லாமே அவரே போட்ட திட்டம்தான்!’ என்று சொல்கிறார்கள் தீபா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்” என்று மெசேஜ் முடிய ஆஃப்லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon