மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

எச்சரிக்கை விடுத்த விஷால்

எச்சரிக்கை விடுத்த விஷால்

கீழ்த்தரமான விமர்சனம் மூலம் மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ சேரன் முயற்சித்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதே சமயம் விஷாலுக்கு எதிராக, `தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும்’ எனச் சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் அவரது தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சேரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விஷால், சேரனுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இயக்குநர் சேரன் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் ஏற்படுத்துகின்றன. என் மீது தவறு இருந்தால் அதைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வேன். ஆனால் சேரன் சொல்வது அடிப்படையிலேயே பொய்யான குற்றச்சாட்டு.

ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பழி வாங்கும் என்பதை ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம் இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.

எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படி தான் செயல்படுகிறேன். ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காகக் குரல் எழுப்பத்தான்.

என்னுடைய நண்பர்களையும் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது. இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும். சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானவேல் ராஜா ராஜினாமா

விஷால், சேரன் பிரச்சினை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியிலிருந்து ஞானவேல் ராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடந்தாண்டு தேர்தல் நடந்தது. முந்தைய நிர்வாகிகள் சரிவர சங்கத்தை நடத்திச் செல்லவில்லை என்று கூறி விஷால் தலைமையிலான இளம் படை களமிறங்கி வெற்றி பெற்றது. விஷால் தலைவராகவும், ஞானவேல்ராஜா மற்றும் பைவ்ஸ்டார் கதிரேசன் செயலாளராகவும், எஸ்.ஆர்.பிரபு பொருளாளராகவும் பதவியேற்றனர்.

இந்த நிலையில் செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஞானவேல்ராஜா தன் கடிதத்தில் கூறியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்குப் போட்டியிடுபவர்கள் வேறு திரைப்பட துறை சார்ந்த சங்கங்களில் நிர்வாக பதவிகளில் இருக்கக் கூடாது என்பது சங்க விதிமுறையாகும். அதனால் தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் பதவியை ஞானவேல்ராஜா ராஜினாமா செய்திருக்கிறார். சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தலைவர் பொறுப்புக்கு தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து ஞானவேல்ராஜா போட்டியிடுகிறார்.

விஷால் வேட்பு மனு நிராகரிப்பு

விஷால் தரப்பிலிருந்தும் சேரன் தரப்பிலிருந்தும் அறிக்கைகள் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்க, தற்போது வேட்பு மனுதாக்கல் செய்த விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சேரன் தலைமையில் நடைபெற்று வரும் உள்ளிருப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட டி.ராஜேந்தர் விஷால் குறித்து பல்வேறு கருத்துகளை முன் வைத்துள்ளார்.

“தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் என்ன செய்துள்ளார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். இதுபோன்று விஷால் தேர்தலில் போட்டியிட்டால் தயாரிப்பாளர்களுக்கு எப்படி மானியம் கிடைக்கும். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுபவம் வேண்டும். நான் பலமுறை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இதுவரை நிராகரிக்கப்படவில்லை” என்று பேசியுள்ளார் டி.ஆர்.

சேரன் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

“விளம்பரத்திற்காக யார் ஆசைப்படுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அனுபவமின்மையும், அவசரமும்தான் விஷாலுக்கு வீழ்ச்சியாக அமைந்திருக்கிறது” என்று விஷாலின் அறிக்கைக்கு கருத்து தெரிவித்துள்ளார் சேரன். மேலும் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சேரன் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon