மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

இலங்கைக்கு இமாலய இலக்கு!

இலங்கைக்கு இமாலய இலக்கு!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 2) டெல்லியில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 536 ரன்களைச் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி, முதல் இன்னிங்க்ஸ் தொடக்கத்தில் சொதப்பினாலும் பின்னர் ஆங்கிலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் சத்தத்தினால் மீண்டது. முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 9 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே 10 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் தனஞ்ஜெயா பந்தில் ஆட்டமிழந்து அரை சதத்தைத் தவறவிட்டார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் சிறப்பாக விளையாடிய தவன் அரைசதம் அடித்தார். அவர் 67 ரன்கள் சேர்த்த நிலையில் சன்டகன் வீசிய பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி வழக்கம் போல் இலங்கை அணியின் பந்து வீச்சினை பவுண்டரிகளாக மாற்றி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

விராட் கோலி 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸை டிக்ளர் செய்து கொண்டது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை சேர்த்தது. பின்னர் 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் சதீரா சமரவிக்ரமா 5 ரன்கள் சேர்த்த நிலையில் சமி பந்தில் ரஹாநேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தனஞ்ஜெயா டி சில்வா தொடக்க வீரர் திமுத் கருணரத்னே உடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் மாறி மாறி விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்த போதும் இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால் ஜடேஜா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் கருணரத்னே, சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து லக்மல் களமிறங்கி அதே ஓவரின் 4ஆவது பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்றைய (டிசம்பர் 5) ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நாளை ஒரே நாளில் 380 ரன்களை சேர்த்து வெற்றிபெறுவது மிகக் கடினமான ஒன்று. அதேபோல் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினால் மட்டுமே வெற்றிபெற முடியும். இல்லையெனில் போட்டி டிராவில் முடியும்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon