மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

டிரம்ப்பின் ஜெருசலேம் கொள்கை:வலுக்கும் எதிர்ப்பு!

டிரம்ப்பின் ஜெருசலேம் கொள்கை:வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித பூமியாக ஜெருசலேம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஒருபகுதியாகக் கருதப்படும் ஜெருசலேமை கடந்த 1967ம் ஆண்டு நடைபெற்ற போர் மூலம் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் அதனைத் தனது நாட்டின் தலைநகராகவும் அறிவித்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே ஜெருசலேமை தங்களின் தலைநகராகக் கூறிவருகின்றபோதும் உலக நாடுகள் இதனை இன்றுவரை அங்கீகரிக்காமல் உள்ளன. சர்வதேச சட்ட திட்டங்களின்படி ஆக்கிரமிப்பு நகரமாகவே ஜெருசலேம் கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகம் தற்போது டெல் அவிவ் நகரில் உள்ளது. இதனை ஜெருசலேமுக்கு மாற்றாமல் இருக்கக் கடந்த 1995ம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்கத் தூதரகத்தை மாற்றுவதைத் தாமதப்படுத்தும் விலக்கில் அமெரிக்க அதிபராக உள்ளவர் 6 மாத்துக்கு ஒருமுறை கையெழுத்திட வேண்டும். இதற்கான காலக்கெடு கடந்த திங்களோடு முடிந்த நிலையில், ட்ரம்ப் கையெழுத்திடாமல் தவிர்த்துள்ளார்.

இதற்கிடையே, ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க ட்ரம்ப் முடிவு செய்துவிட்டார் என்றும் அதற்கான அறிவிப்பை இந்த வாரத்தில் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய முடிவை அமெரிக்கா எடுத்தால் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்று ஜோர்டான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெருசலேம் தொடர்பாக அமெரிக்கா வெளியிடும் எந்தவொரு அறிவிப்பும், சமாதான செயல்முறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சவூதி அரேபியாவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக ட்ரம்ப்பை தொடர்புகொண்ட பிரான்ஸ் அதிபர் மேக்ரான் “ அமெரிக்காவின் முடிவு பெரும் பிரச்சனையை உண்டாக்கும். இவ்விவகாரத்தில் எந்த முடிவும் இஸ்ரேல், பாலஸ்தீன பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே பிரான்ஸின் எண்ணம்” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் அறிவிப்பு சமாதான நடவடிக்கைகளை அழித்துவிடும் என்று பாலஸ்தீனமும் கவலை தெரிவித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் கூட ட்ரம்ப்பின் முடிவு ஆபத்தில் முடியும் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon