மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 25 ஜன 2020

மதத்தை குறிவைத்து விமர்சனம் :குஷ்பூ பதில்!

மதத்தை குறிவைத்து விமர்சனம் :குஷ்பூ பதில்!

மத்திய அரசின் திட்டங்களையோ மோடியையோ யார் விமர்சித்தாலும் அவர்களின் பூர்வீகத்தை தோண்டி எடுத்து அதை அவமானகரமான ஒன்றாக சித்தரித்து விமர்சிக்கும் போக்கை பாஜகவைச் சேர்ந்தவர்களும் அவர்களை பின்தொடர்பவர்களும் தொடர்ந்து செய்துவருகின்றனர். இதற்கு நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ தற்போது இலக்காக அவர் அதை துணிச்சலாக எதிர்கொண்டுள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பழிப்பு போன்ற திட்டங்களை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றதால் விஜய்யை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் நேரடியாக விமர்சித்தனர். ஹெச்.ராஜா இன்னும் ஒருபடி போய் விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையின் நகலை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி ஜோசப் விஜய் என்று அடிக்கோடிட்டு காட்டும் விதமாக எழுதியிருந்தார். மெர்சல் படம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் தனது பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டதை பலரும் பாஜகவினருக்கு அவர் விடுத்துள்ள பதில் தான் என்று கருத்து தெரிவித்தனர்.

தற்போது குஷ்பூவின் மதத்தை குறிவைத்து விமர்சிக்கும் போக்கு சமூகவலைதளங்களில் நடைபெற்றுவருகிறது. மோடி தனது இளமைக் காலத்தில் வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக வலம் வரும் செய்தியில் அந்த ரயில் நிலையம் 1973ஆம் ஆண்டு தான் கட்டப்பட்டது, மோடி வீட்டை விட்டு 1971ஆம் ஆண்டே வெளியேறிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சல்மான் நிஷாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை குஷ்பூ ரீ ட்விட் செய்தார். இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த பலரும் குஷ்பூவை அவரது இயற்பெயரான நகத் கான் என்ற பெயரில் விமர்சித்து வருகின்றனர். இதற்கு குஷ்பூ தனது மற்றொரு பதிவின் மூலம் பதிலளித்துள்ளார்.

“எனது பெயர் நகத் கான் என்பதை கண்டுபிடித்து விட்டனராம். முட்டாள்களே எனது பெற்றோர்களால் இந்த பெயர் வைக்கப்பட்டது. நான் ‘கான்’ தான். அதற்கு என்ன? 47 வருடங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களை இந்த நாட்டுக்கு எதிரானவர்கள் என்பது போல் சித்தரிக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றனர் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவு செய்துவருகின்றனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon