மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

2.5 கோடி வழக்குகள் தேக்கம்!

2.5 கோடி வழக்குகள் தேக்கம்!

நீதித்துறை மற்றும் சட்ட சேவைகள் சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் அந்தச் சேவையை பெறுவதற்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டுமானால்,அதனுடைய நோக்கத்தை அடைய முடியாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்தது. நீண்ட நேரம் காத்திருப்புக்கு காலியாகயுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கைதான் காரணம் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த “சட்டப்பூர்வ கொள்கைகளுக்கான மையம்” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நீதிமன்றங்களில் 2.5 கோடி வழக்குகள் தேங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. சிவில் மற்றும் குற்றவழக்குகள் பல ஆண்டுகளாகத் தேங்கி கிடக்கிறது. நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 23 சதவிகித காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலியாகவுள்ள சிவில் நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாத பட்டியலில் அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன. ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் மிகக் குறைவாகவே உள்ளன.

காலி பணியிடங்கள் உயர்ந்து கொண்டே போகும்போது, அதை நிரப்புவதற்கு அடிக்கடி தேர்வுகள் வைப்பதில்லை. அப்படியே வைத்தாலும், உயர் நீதிமன்றங்களால் போதுமான தகுதி வாய்ந்த நபர்களைக் கண்டுபிடிக்கவும் இயலவில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.பல மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் ஆட்சேர்ப்பு செயல்முறை, வழக்கமான மற்றும் சரியான நேரத்தில் நடப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசுக்கு இரண்டு ஆலோசனைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. மேலும், விதிகளின்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிபதி பணியிடங்களை நிரப்பாததும், ஒவ்வொரு வழக்குகளையும் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கால அளவு பின்பற்றப்படாததும் வழக்குகள் மேலும் தேங்குவதற்கு காரணமாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon