மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

சீனாவிடம் நிதி திரட்டிய லாவா!

சீனாவிடம் நிதி திரட்டிய லாவா!

இந்தியாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனமான லாவா, சீனாவின் மொபைல் நிறுவனத்திடமிருந்து ரூ.193 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது.

உற்பத்தியை அதிகப்படுத்தவும், உள்ளூர் மொபைல் வடிவமைப்பு மையத்தை அமைக்கவும் சீனாவின் சின்குவா குழுவைச் சேர்ந்த யுனிக் மெமரி டெக்னாலஜி நிறுவனம், இந்தியாவின் லாவா நிறுவனத்துக்கு ரூ.193கோடியை வழங்கியுள்ளது. இதற்குப் பதிலாக அந்நிறுவனத்துக்கு ரூ.100 மதிப்புடைய 5 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து இந்திய நிறுவனத்துக்கு நிதியுதவி கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து லாவா நிறுவனத்தின் முதன்மை விற்பனை அதிகாரியான சுனில் ரெய்னா பிசினஸ்லைன் ஊடகத்திடம் கூறுகையில், "சீனாவின் முன்னணி நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளோம். இதன் மூலம் தொழில்நுட்ப ரீதியில் உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுப்போம்” என்றார்.

லாவா நிறுவனம் சீனாவில் உள்ள ஆலையில் இதுவரை 8 ஸ்மார்ட்போன்கள் மாடல் மற்றும், 3 ஃபீச்சர் போன் மாடல்களைத் தயாரித்துள்ளது. சீனாவின் க்ஷியோமி, ஒப்போ, ஒன்-பிளஸ், விவோ மொபைல்களின் இந்தியப் படையெடுப்பு, இந்திய ஸ்மார்ட்போன் வடிவமைப்பாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக டாப் 10 பட்டியலில் முதல் ஐந்து இடங்களை மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற இந்திய தயாரிப்புகள், சீனாவின் ஒப்போ, விவோ, க்ஷியோமி நிறுவனத்திடம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை இந்தியாவில் 51 சதவிகிதம் சீன மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளது.

ஆய்வு நிறுவனமான ஐடிசி, பிசினஸ்லைன் ஊடகத்திற்கு அளித்துள்ள அறிக்கையின்படி, மின்னணு விற்பனையாளர்கள் மூலம் 1.3 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 சதவிகிதம் அதிகமாகும். முன்னதாக ஏர்டெல், ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்கான் நிறுவனத்துடன் இணைந்து ரூ.1349 ஸ்மார்ட்போனையும், வோடஃபோன், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.999 ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon