மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

குறைதீர் முகாமில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

குறைதீர் முகாமில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமிற்கு மனு கொடுக்க வந்த இளம்பெண் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் முகாம் நேற்று(டிசம்பர் 4) நடைபெற்றது. கலெக்டர், நிர்மல்ராஜ் மனுக்களை பெற்றுக் கொண்டு இருந்தபோது, ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு விசாரணையில், அவர் பெயர் சங்கீதா என்பதும், பத்திரப்பதிவு அலுவலகத்தில், தற்காலிக ஊழியராகப் பணிபுரிவதும் தெரிந்தது. இவரது கணவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி வேன் வாங்கியுள்ளார். வேன் சரியாக ஓடாததால் கடன் பாக்கி, 3.80 லட்சம் ரூபாயைக் கட்ட முடியவில்லை.

எனவே, வங்கி நிர்வாகத்தினர் வேனை எடுத்துச் சென்று விட்டனர். இதனால், மனம் உடைந்து காணப்பட்ட சங்கீதா, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். அவர் மயங்கி விழுவதற்கு முன்பு, அருகில் இருந்தவர்களிடம், 'எலி மருந்து குடித்துள்ளேன்' என, தெரிவித்துள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோன்று திருச்சி மாவட்டம், கண்ணனுாரைச் சேர்ந்த 39 வயதான பெண் சம்பூர்ணம். கட்டட தொழிலாளியான இவருக்கு, இன்னும் திருமணமாகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், இவரிடம் ஆபாசமாகப் பேசி, தொந்தரவு கொடுத்துள்ளனர். இது பற்றி, கடந்த மாதம் போலீசில் சம்பூர்ணம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில் நேற்று, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்கு சம்பூர்ணம் வந்தார். அப்போது, வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மறைத்து வைத்திருந்த பிளேடால் தன் கையை அறுத்துக் கொண்டார். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார், அவரைத் தடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon