மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 20 பிப் 2020

எல்லை தாண்டிய இந்திய ராணுவம்!

எல்லை தாண்டிய இந்திய ராணுவம்!

கடந்த 2015ம் ஆண்டு மியான்மர் எல்லையைத் தாண்டி, அங்கிருந்த நாகாலாந்து தீவிரவாதக்குழுக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தினோம் என்று சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒப்புக்கொண்டிருக்கிறார் இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத். ரோஹிங்கியா பிரச்சனை மற்றும் நாகா தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளுக்காக மியான்மரின் ஒத்துழைப்பை மத்திய அரசு நாடிவரும் நிலையில், இவ்வாறு பேசியிருக்கிறார் ஜெனரல் பிபின்.

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று, நாகாலாந்து நேஷனலிஸ்ட் சோஷியலிஸ்ட் கவுன்சில் குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மியான்மர் எல்லைக்குள் பதுங்கியிருந்தவர்களைக் கண்டறிந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்காக மியான்மர் எல்லையைத் தாண்டி 7 கிலோமீட்டர் தூரம் வரை இந்திய ராணுவம் ஊடுருவியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசோ, வெளியுறவுத்துறையோ எந்த கருத்தும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, மணிப்பூரில் 18 இந்திய ராணுவத்தினர் நாகா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கவே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று மகாராஷ்டிராவிலுள்ள புனேவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் கலந்துகொண்டார் இந்திய தரைப்படை தளபதி பிபின் ராவத். அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மியான்மர் எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று அவர் ஒத்துக்கொண்டார்.

ராணுவக்குழுவை வழிநடத்திய அதிகாரிக்கு மட்டுமே அந்த தகவல் தெரியுமென்றும், இரண்டு மணி நேரம் முன்னதாகவே வீர்ர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டதென்றும், அப்போது அவர் தெரிவித்தார். அந்த தாக்குதலில் தீவிரவாதக் குழுக்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்தது என்றும், தேவைப்பட்டால் இதுபோன்ற ராணுவ தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், இந்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகங்கள், ராவத்தின் பேச்சை ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாகா தீவிரவாதிகளை ஒடுக்கவும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் பிரச்சனை தீர்க்கவும், மத்திய அரசு மியான்மர் அரசின் உதவியை நாடுகிறது. இந்த நிலையில், ராவத்தின் பேச்சு சர்ச்சையைக் கிளப்பும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. “மியான்மரில் இருந்துவரும் சூழ்நிலையையும் இந்தியாவின் முயற்சிகளையும் ராணுவத்தளபதி மனதில் கொண்டிருக்க வேண்டும். தாக்குதல் விவரங்களை வெளியில் சொல்வது சூழலை இன்னும் மோசமாக்கும்” என்ற தகவல் அரசு சார்பில் ராவத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon