மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

விஜயகாந்துக்கு பிடி வாரண்ட்!

விஜயகாந்துக்கு பிடி வாரண்ட்!

செய்தியாளரைத் தாக்கிய வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் வந்த விஜயகாந்த், தனியார் தொலைக்காட்சி செய்தியாளரைத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. தாக்குதலுக்குள்ளான செய்தியாளர், விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதை அடுத்து இன்று (டிசம்பர் 5) அவர் ஆஜராக வேண்டும் என்று நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்றும் விஜயகாந்த் ஆஜர் ஆகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

விஜயகாந்த் தற்போது சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2012ம் ஆண்டு மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜயகாந்திடம் தேமுமுக எம்.எல்.ஏ.க்கள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் பத்திரிகையாளர் ஒருவரை ஒருமையில் பேசினார். அவருடன் வந்தவர்கள் பத்திரிகையாளரை கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon