மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

ஜெயலலிதா நினைவுதினம்: அதிமுகவினர் அஞ்சலி!

ஜெயலலிதா நினைவுதினம்: அதிமுகவினர் அஞ்சலி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அவரது முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிமுகவினர்கருப்பு சட்டை அணிந்தபடி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பழனிசாமி, பன்னீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன்,எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்றனர். பின்னர் கட்சியை காப்போம் என்று முதல்வர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சென்னை மாநகாராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

டிடிவி தினகரன் தலைமையில் ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி பிரம்மாண்டமாக இன்று பகல் 12.30 க்கு தொடங்கியது. பெரும் திரளான தொண்டர்களுடன் தினகரன் அஞ்சலி செலுத்தப் புறப்பட்டார்.

இதேபோல், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை சாலையில் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செவ்வாய், 5 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon